Published : 02 Jan 2021 12:24 PM
Last Updated : 02 Jan 2021 12:24 PM
மத்திய அரசு ஊழியர்கள் பணியின் போது ஊனம் ஏற்பட்டு, பணியில் தொடர்ந்தாலும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் இன்று அறிவித்தார். புத்தாண்டில் முக்கியமான அறிவிப்பாக இது கருதப்படுகிறது.
இந்த உத்தரவு, பணிச்சூழல் காரணமாக இப்பிரச்சினைகளை அதிகம் சந்திக்கும் மத்திய ஆயுதப்படைகளில் பணியாற்றும் சிஆர்பிஎப், பிஎஸ்எப் மற்றும் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.
1.1.2004ஆம் ஆண்டுக்குப் பின் நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் (என்பிஎஸ்) உள்ளவர்களுக்கு மத்திய சிவில் சர்வீசஸ், சிறப்பு ஓய்வூதியத் திட்ட விதிமுறைகளில், இது போன்ற ஊனம் இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்தப் புதிய உத்தரவு மூலம் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களும், சிறப்பு ஓய்வூதிய விதிமுறைகளின் கீழ் உள்ள பயன்களைப் பெறலாம்.
அரசு ஊழியர் பணியின் போது ஊனம் அடைந்து பணியில் தொடர்ந்தாலும், அவருக்கு இழப்பீட்டுத் தொகை, உடல் உறுப்பு பாதிப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும்.
இந்த உத்தரவு குறித்து திருப்தி தெரிவித்த டாக்டர். ஜித்தேந்திர சிங், ‘‘விதிமுறைகளை எளிதாக்குவதாகவும், பாரபட்சமான உட்பிரிவுகளை அகற்றவும் மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது’’ என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT