Last Updated : 02 Jan, 2021 12:06 PM

1  

Published : 02 Jan 2021 12:06 PM
Last Updated : 02 Jan 2021 12:06 PM

ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகள் அகமதாபாத்தில் முக்கிய சந்திப்பு: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை

கோப்புப்படம்

புதுடெல்லி


ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகிகள், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்பட முக்கியத் தலைவர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வரும் 5-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பாக மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது, ஆட்சிையத் தக்கவைக்கும் முயற்சியில், பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில் பாஜக, திரிணமூல் இடையே கடும் மோதல் தொடங்கி விட்டது. இந்த முறை இரு கட்சிகளுக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது. சமீபத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மே. வங்கம் சென்றிருந்தபோது, அவரின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டது.

அதன்பின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், அவர்களை விடுவிக்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இதனால், மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே உரசல் தீவிரமாகியுள்ளது.

இந்த சூழலில் அகமதாபாத்தில் வரும் 5-ம் தேதி நடக்கும் ஆர்எஸ்எஸ், பாஜக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் மேற்கு வங்க நிலவரம் குறித்து பிரதானமாக விவாதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் சிலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத்துக்கு இரு நாட்கள் பயணமாகச் செல்லும் ஜே.பி.நட்டா 5-ம் தேதி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாள் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு 7-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்வார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர். ஆனால், அவர்கள் யார் எனும் விவரத்தை வெளியிடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் செயல்பாடு, அடுத்து வரும் ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதுகுறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில் “ இது வழக்கமாக பாஜகவுடன் நடக்கும்கூட்டம்தான். பாஜகவுடன் பல்வேறு விஷயங்கள், விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு முன் பாஜக தலைவராக இருந்த அமித் ஷா கூட்டத்தில் பங்கேற்றார். இப்போது ஜே.பி.நட்டா வரஉள்ளார்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x