Published : 01 Jan 2021 05:18 PM
Last Updated : 01 Jan 2021 05:18 PM
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாடே கோலாகலமாகக் கொண்டாட்டங்களில் திளைத்துக்கொண்டிருக்க சத்தீஸ்கர் மாநில முதல்வரோ இன்றும் வேலைக்குப் புறப்பட்ட கூலித் தொழிலாளர்களை அழைத்து அவர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும்
நாட்டுமக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ரிசாலி தொழிலாளர்களுடன் புத்தாண்டு தொடக்கத்தைக் கொண்டாடினார். அவருடன் உள்துறை அமைச்சர் தம்ரத்வாஜ் சாஹுவும் ரிசாலிக்கு சென்றார். ''தொழிலாளர்களுடன் முதல்வரின் புத்தாண்டு தொடங்குவது மிகவும் புனிதமானது'' என்று அமைச்சர் கூறினார்.
வேலைக்காக அதிகாலையில் சாவடி எனப்படும் தங்கள் பணியிடத்தை அடைந்த தொழிலாளர்கள் அங்கே எதிர்பாராமல் தங்கள் முதல்வரை பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
'சத்யமேவ் ஜெயதே' உடன் 'ஸ்ரமேவ் ஜெயதே' எங்கள் முழக்கமாகவும் இருக்கும். புத்தாண்டின் முதல் நாளில் ரிசாலியின் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஷ்ரமேவ் ஜெயதே. தொழிலாளர்களே நமது கரங்கள். அவர்கள்தான் நமது சத்தீஸ்கரை தங்கள் கடின உழைப்பால் உருவாக்கி, நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துள்ளனர். நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இதை மேலும் மேம்படுத்துவோம்.
2020-ம் ஆண்டு கரோனா தொற்றுநோயால் நிறைய சவால்களுடன் வந்தது. கரோனா வைரஸால் ஏற்பட்ட ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த மற்ற மாநிலத் தொழிலாளர்களுக்கு நாங்கள் பல உதவிகளை செய்தோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் வெவ்வேறு மாநிலங்களில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்தோம். அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கு நமது அரசு தேவையான ஏற்பாடுகளை செய்தது.
தொழிலாளர்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் மாநில அரசு கவனம் செலுத்தும். இந்த ஆண்டு 100 புதிய பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், சிறந்த சுகாதார வசதிகளுக்காக 'டாய் தீதி' (தாய்-சகோதரி) மொபைல் கிளினிக்குகள் திறக்கப்படும்.
இவ்வாறு சத்தீஸ்கர் முதல்வர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT