Published : 01 Jan 2021 10:34 AM
Last Updated : 01 Jan 2021 10:34 AM
புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் "இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது மனப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு புத்தாண்டும் புதிய தொடக்கத்துக்கான வாய்ப்பை வழங்குவதோடு, தனிநபர் மற்றும் கூட்டு மேம்பாட்டுக்கான நமது உறுதியை வலுப்படுத்துகிறது.
கோவிட் காரணமாக உருவாகியுள்ள சூழ்நிலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னேறுவதற்கான வாய்ப்பாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்தும் கலாச்சார மதிப்புகளை வலுப்படுத்துவதற்கான நேரமிது.
2021-ஆம் ஆண்டு துவங்கும் இந்த வேளையில், அன்பு, கருணையுடன் கூடிய, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்துகிற அனைவருக்குமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்தோடும் இருந்து, நமது நாட்டின் வளர்ச்சிக்கான பொது இலக்கை எட்டுவதற்கு புதிய உற்சாகத்துடன் முன்னேற வேண்டும்," என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு
புத்தாண்டு 2021 கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
“நாம் புதிய ஆண்டு 2021-க்குள் அடியெடுத்து வைப்பதால், நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு என்பது நாம் அனைவரும் எதிர்நோக்கும் ஒரு நிகழ்வு. இது நம்பிக்கை, மற்றும் நட்பு ஆகியவற்றின் உணர்வை வலுப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம்.
மிக மோசமான தொற்று நோய் மூலம், நமக்குப் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஆண்டை நாம் வழியனுப்பி வைப்பதால், நம்பிக்கை உணர்வுடன் புத்தாண்டை நாம் வரவேற்போம்.
உறுதி, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் மீ்ள்சக்தி ஆகியவற்றைக் கொண்டு சவால்களைச் சமாளிப்போம் என நம்புவோம். கடந்த ஆண்டை விட, 2021 மிகவும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான பூமியை உருவாக்கட்டும்.
இந்தத் தொற்றைப் போராடித் தோற்கடிப்போம் என்ற புதிய உறுதி மற்றும் நம்பிக்கையுடன் இந்தப் புத்தாண்டுக்குள் நாம் நுழைவோம். தடுப்பூசி விரைவில் எந்த நேரத்திலும் கிடைக்க வாய்ப்புள்ளதால், 2021ஆம் ஆண்டை உற்சாகத்துடனும், நேர்மறையுடனும் வரவேற்போம்.
வேத தீர்க்கதரிசிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பிரார்த்தித்தது போல், வரும் ஆண்டில் நாம் நல்ல செய்திகளைக் கேட்போம், இனிமையான விஷயங்களைப் பார்ப்போம், அர்த்தமுள்ளதாகவும் அமைதியாகவும் வாழ்க்கையைச் செலவிடுவோம் என்று நம்புவோம்’’.
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “ இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!, 2021 ஆம் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரட்டும். இந்த ஆண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும்." என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT