Last Updated : 31 Dec, 2020 06:07 PM

5  

Published : 31 Dec 2020 06:07 PM
Last Updated : 31 Dec 2020 06:07 PM

தினசரி 200 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு: பசியோடு உறங்கச் செல்பவர்களை அரவணைக்கும் குஜராத் தம்பதி

சூரத் நகரில் நலித்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவளிக்கும் மீனா மேத்தா, அதுல் தம்பதியினர் | படம்: ஏஎன்ஐ.

சூரத்

பசியோடு உறங்கச்செல்லும் குழந்தைகளைப் பரிவோடு அரவணைத்து, தினசரி 200 பேருக்கு ஊட்டச்சத்துள்ள உணவை அளித்து குஜராத்தைச் சேர்ந்த தம்பதியினர் மகிழ்கின்றனர்.

சூரத் நகரத்தைச் சேர்ந்த மீனா மேத்தா இயல்பாகவே தொண்டுள்ளம் மிக்கவர். அவரது உணர்விற்கு ஏற்ப அமைந்துள்ள அவரது கணவர் அதுல். இருவரும் சேர்ந்து, தினசரி 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு பரிமாறுவதன் மூலம் நகரத்தில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்களின் வாழ்க்கையில் ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மீனா மேத்தா ஏற்கெனவே எட்டு ஆண்டுகளாக தனது சுற்றுப்புறத்தில் உள்ள சிறுமிகளுக்கு சுகாதார உபகரணங்கள் மற்றும் சுகாதார நாப்கின்களை விநியோகித்துள்ளார், ஆனால் நாடு ஊரடங்கில் முடங்கிக்கிடந்தபோது அவரது பணிகள் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து மீனா மேத்தா கூறியதாவது:

''ஊரடங்குக்குப் பிறகு மீண்டும் என் பணி தொடங்கியுள்ளது. நலிந்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்குக் காரணமாக ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முதன்முதலில் எங்கள் பகுதியில் ஒரு பிச்சைக்காரரைச் சந்தித்தேன். பசியோடு தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் புகையிலையைத் தந்துவிடுவார்களாம். புகையிலையை உட்கொண்டபிறகு பசியெடுக்காதாம். அதன்பிறகு குழந்தைகள் உணவு பற்றி எதுவும் கேட்கமாட்டார்களாம். காயும் வயிறு பற்றிய கவலையின்றி புகையிலை உட்கொண்ட மயக்கத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் தூங்கிவிடும்.

இத்தகவல் எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. அதன்பின்புதான் நாமும் குழந்தைகளுக்கு உதவினால் என்ன என்ற யோசனை வந்தது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு உணவளிக்கும் யோசனையை நாங்கள் கொண்டுவந்தோம். எனது கணவர் உதவியுடன் நானும் இணைந்து உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபடுகிறேன். இது குழந்தைகள் மற்றும் ஆதரவின்றி வாடும் வயதானவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில், இதற்கான வேலை என்பது ஒரு நாள் முழுவதும் எடுக்கும். ஆனால், இப்போது நிறையப் பேரிடமிருந்து உதவி கிடைத்துவருவதால் பணி எளிமையாகி வருகிறது. அருகில் உள்ள மக்கள் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்கள் நிறைய மளிகைப் பொருட்களை வாங்கிவந்து எங்கள் வீட்டு வாசலில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்''.

இவ்வாறு மீனா மேத்தா தெரிவித்தார்.

உதவி செய்வதற்குப் பெரிய பட்ஜெட் எல்லாம் தேவையில்லை பெரிய மனம் இருந்தால் போதும் என்று நிரூபித்துள்ள இந்த சூரத் தம்பதியினர் உணவின் அளவை விட தரத்தில்தான் அதிக கவனம் செலுத்துன்றனர். அவர்கள் சமைத்துத் தரும் சத்தான உணவு குழந்தைகளுக்கு எடை அதிகரிக்க உதவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x