Last Updated : 31 Dec, 2020 05:29 PM

 

Published : 31 Dec 2020 05:29 PM
Last Updated : 31 Dec 2020 05:29 PM

எல்லையில் பயங்கரவாத நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளன: காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தகவல்

காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் பேசும் காட்சி | படம்: ஏஎன்ஐ

ஜம்மு

2018, 2019ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், காஷ்மீர் எல்லையில் இந்த ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்று காவல்துறைத் தலைவர் தில்பாங் சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் வியாழக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாங் சிங் கூறியதாவது:

''2018 மற்றும் 2019 உடன் ஒப்பிடுகையில் காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. 2019 உடன் ஒப்பிடும்போது பயங்கரவாதக் குழுக்களில் இணைபவர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. இதில் உள்ள நேர்மறையான அம்சம் என்னவெனில் அவர்களில் 70 சதவீதம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் ரகசியமான அடுக்குமுறை வாழ்க்கையும் குறைந்துள்ளது.

பாகிஸ்தான் பல முயற்சிகள் செய்தபோதிலும், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல் மிகக் குறைவு. அவர்கள் காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் ஆட்களை நம்ப வேண்டியிருக்கிறது. மேலும் அவர்கள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் பணத்தை ட்ரோன்கள் மூலம் வழங்க முயன்றனர். இம்முயற்சிகள் பெரும்பாலும் நமது ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டன. இதில் அவர்கள் தோல்வியையே கண்டனர்.

இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் 100க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 225 பயங்கரவாதிகள் - குறிப்பாக, காஷ்மீரில் 207 மற்றும் ஜம்முவில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு பிராந்தியத்தில் ஒரு டஜன் பயங்கரவாதிகள் இருந்ததனர். ஆனால், இப்போது அந்த எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துவிட்டது. அவர்கள் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ளனர். நாங்கள் அவர்களைக் கண்காணித்து வருகிறோம்.

கோவிட்-19 நிலைமை, காவல்துறையைப் பொறுத்தவரை, காவல் படையைச் சேர்ந்த 15 பேர் தங்கள் கடமைகளைச் செய்யும்போது உயிரிழந்தனர். மொத்தம் 3,500 போலீஸாருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் இப்போது குணமடைந்துள்ளனர்''.

இவ்வாறு காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x