Published : 01 Oct 2015 10:24 AM
Last Updated : 01 Oct 2015 10:24 AM
தீபாவளி மற்றும் தசரா பண்டிகை களின்போது பயன்படுத்தப்படும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி, 6 மாத குழந்தைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே குழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின் போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. உலகில் அதிக மாசு ஏற்படும் நகரமாக டெல்லி பட்டியலிடப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. உடல் உறுப்புகள் இன்னும் வளராத நிலையில் உள்ள எங்களுக்கு இதுபோன்ற பட்டாசுகளின் வெடிச் சத்தத்தால் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், இருமல், நுரையீரல் நோய்களுக்கும் பட்டாசு புகை மூலம் ஏற்படும் மாசு காரணமாக அமைகிறது. சுவாச கோளாறு இருப்பவர்களுக்கு இதன்மூலம் நோய் அதிகரிக்கிறது. பெங்களூரு நகரில் 2013-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி, தீபாவளி பண்டிகையின்போது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 32 சதவீதம் மாசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது, சுவாசக் கோளாறு நோய் பாதிப்பு 40 சதவீதம் அதிகரிப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு அவசியம். எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தில் இடமுண்டு
இதுபோன்று மைனர் மற்றும் குழந்தைகள் சார்பில் அவர்கள் நலன்மீது அக்கறையுள்ள பெற்றோர் பொதுநல மனு தாக்கல் செய்ய சட்டத்தில் இடமுண்டு. இருப்பினும், 6 மாத குழந்தைகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT