Last Updated : 30 Dec, 2020 05:14 PM

 

Published : 30 Dec 2020 05:14 PM
Last Updated : 30 Dec 2020 05:14 PM

ஜனவரி 31-ம் தேதி வரை சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து தடை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவைக்கான தடை 2021, ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது.

அதேசமயம், குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடியவகையில் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவை அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சர்வதேச விமானப் போக்குவரத்தைக் கடந்த மார்ச் 22-ம் தேதி மத்திய அரசு நிறுத்தியது. அதன்பின் சர்வதேச அளவில் வர்த்தகரீதியான பயணிகள் விமானப் போக்குவரத்தை அரசு தொடங்க அனுமதிக்கவில்லை.

அதேசமயம், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பொருட்டு, வந்தே பாரத் மிஷன் திட்டத்தை மத்திய அரசு கடந்த மே 7-ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூடான், பிரான்ஸ் உள்ளிட்ட 24 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து, அந்த நாடுகளுடன் பயோ-பபுள் சூழலை ஏற்படுத்தி சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்தை டிசம்பர் 31-ம் தேதி வரை ரத்து செய்திருந்தது. இந்நிலையில், அந்தத் தடை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து ரத்தை மேலும் ஒரு மாதம் வரை நீட்டித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், “ சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடை 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதேநேரம், நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் சர்வதேச விமானச் சேவை அனுமதிக்கப்படும்.

இந்த விமானப் போக்குவரத்து ரத்து உத்தரவால் சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட சரக்கு விமானப் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x