Published : 30 Dec 2020 01:12 PM
Last Updated : 30 Dec 2020 01:12 PM
நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். என் தந்தையும், தாயும் விவசாயிகள். ஆதலால், ராகுல் காந்தியை விட எனக்கு விவசாயம் நன்றாகத் தெரியும். விவசாயிகளின் வேதனை எங்களின் வேதனை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 2-வது மாதத்தை எட்டியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இன்று 6-வது கட்டப் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகமாகப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டவை. இதை ஆம், சரி மனநிலையுடன் நாம் அணுகக்கூடாது. அதேபோல விவசாயிகளும் வேளாண் சட்டத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பிரித்துப் பேசுவதையும் நிறுத்த வேண்டும், தேவைப்பட்டால் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயாராக இருக்கிறது.
இந்த தேசத்தின் ஏழை மக்கள், விவசாயிகள் மீது மத்திய அரசு அதிகமான அக்கறை கொண்டிருக்கிறது. அவர்களின் துயரத்தையும், வேதனையையும் எங்களின் வேதனையாகப் பார்க்கிறோம்.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக எந்த முடிவையும் அரசு எடுக்க முடியாது. ராகுல் காந்தி என்னைவிட வயதில் மிகவும் இளையவர். எனக்கு அவரை விடவும் விவசாயம் நன்றாகத் தெரியும். ஏனென்றால், நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். என் தந்தையும், தாயும் விவசாயிகள்தான்.
நான் விவசாயியின் மகன். ஆதலால், விவசாயிகளுக்கு எதிராக எந்த முடிவும் எடுக்கமாட்டோம். நமது பிரதமர் மோடி, ஏழைத் தாய்க்கு மகனாகப் பிறந்தவர். இதுமட்டும்தான் என்னால் சொல்ல முடியும். இதற்குமேல் என்னால் விளக்கமாகக் கூற இயலாது.
வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளின் மனதில் குழப்பத்தை விளைவிக்க சில சக்திகள் முயல்கின்றன. விவசாயிகளுக்கு எழுந்துள்ள சந்தேகங்களைத் தீர்க்க மத்திய அரசு முயன்று வருகிறது. பலவிவசாயிகளுடன் மிகவும் பணிவுடன் பேசியிருக்கிறோம்.
நான் சொல்ல விரும்புவதெல்லாம், மத்திய அரசுடன் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒவ்வொரு பகுதியாகப் பேசி சந்தேகத்தைத் தீர்க்கட்டும். ஆனால், ஆம் அல்லது இல்லை என்ற பேச்சு சரியாகாது.
நான் பஞ்சாப் மாநில விவசாயிகளிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், தொலைத்தொடர்பு கோபுரங்களை சேதப்படுத்தாதீர்கள். அவ்வாறு செய்யக் கூடாது. அவ்வாறு யாரேனும் ஈடுபட்டாலும் அதை நிறுத்திவிடுங்கள்''.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT