Published : 30 Dec 2020 09:27 AM
Last Updated : 30 Dec 2020 09:27 AM
நிழல் உலக தாதாக்களான சோட்டா ராஜன் படத்துடன் தபால் தலை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தபால் துறை விளக்கம் அளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தபால் அலுவலகம் நிழல் உலக தாதாக்களான சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் தபால் தலையை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குற்றவாளிகள் படத்துடன் தபால் தலை வெளியிட்டதாக தகவல் வந்த நிலையில் தபால் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் குற்றவாளிகள் சோட்டா ராஜன், முன்னா பஜ்ரங்கி படத்துடன் கான்பூரில் உள்ள தபால் அலுவலகம் தபால் தலை வெளியிட்டுள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பான விதிகளில், ஒரு வாடிக்கையாளர் ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் தனது படம் அல்லது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் படத்துடன், பிறந்தநாள், பணி ஓய்வு, வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்ச்சியின் போது தபால் தலையை தபால் அலுவலகங்கள் மூலம் அச்சிட்டுக் கொள்ளலாம். இதற்கு அந்த வாடிக்கையாளர் கீழ்கண்டவற்றைத் தெளிவாக எழுதிக் கொடுத்து அதில் கையெழுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
‘‘வாடிக்கையாளர் சட்டத்தை மீறும் அல்லது சமூகத்தின் எந்தவொரு தார்மீக மதிப்புகளையும் அழிக்கக்கூடிய அல்லது எந்த மூன்றாம் தரப்பு, நாடு அல்லது இந்திய தபால்துறையின் நலனுக்கு எதிரான எந்தவொரு படத்தையும் சமர்ப்பிக்கக் கூடாது. குறிப்பாக, படத்தில் சட்ட விரோதமான, புண்படுத்தும், அவமதிக்கும் அல்லது ஒழுக்கக்கேடான எதையும், நேர்மையற்ற, ஏமாற்றும் அல்லது தேசபக்தி இல்லாத, எந்த மத அல்லது அரசியல் கருத்துக்கள் ஆகியவற்றையும் கொண்டிருக்கவோ அல்லது குறிக்கவோ அல்லது பரிந்துரைக்கவோ கூடாது’’
இந்த விஷயத்தில் மேற்கூறிய நிபந்தனைகள் வாடிக்கையாளரால் மீறப்பட்டுள்ளன. விண்ணப்பத்திலும், அவர் தாக்கல் செய்த நிழற்படம் குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதைத் தவிர்க்க, சம்பந்தபட்டவர்கள் அனைவரும், அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தபால் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT