Published : 30 Dec 2020 03:16 AM
Last Updated : 30 Dec 2020 03:16 AM
சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக ரயில் பாதை திட்டம் தாமதமாவதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ரயில்வே துறையில் சரக்கு போக்குவரத்துக்காக பிரத்தியேகமாக ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு 2006-ல் ஒப்புதல் தரப்பட்டது. 2014 வரை இந்தத் திட்டம் வெறும் காகித அளவில் மட்டுமே உள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு அதன் முக்கியத்துவத்தை உணராமல் மெத்தனமாக இருந்து வந்திருக்கிறது.
2014 வரை குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கூட ரயில் பாதை அமைக்கப்படவில்லை. 2014-ல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியது.
இந்நிலையில், நாட்டின் முதல் பிரத்தியேக சரக்கு போக்குவரத்து வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
சரக்கு ரயில் வழித்தட திட்டத்தை எனது நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தி வருகிறேன். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து அடுத்த சில மாதங்களில் 1,100 கிமீ தொலைவுக்கான ரயில் பாதையை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
இந்தத் திட்டத்துக்கு அப்போது கணிக்கப்பட்ட செலவு மதிப்பைவிட தற்போது 11 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தத் திட்டத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு செயல்படுத்தி இருந்தால் பெரும் செலவு மிச்சமாகி இருக்கும். அத்துடன் நாட்டின் சரக்குப் போக்குவரத்து துரிதமாகி இருக்கும். இதன்மூலம் பெரும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் நிகழ்த்தியிருக்க முடியும்.
8 ஆண்டுகளில் ஒரு கிமீ தொலைவு கூட செயல்படுத்தாத நிலையில் ஆறு ஆண்டுகளில் 1,100 கிமீ தொலைவுக்கு ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT