Published : 29 Dec 2020 08:10 PM
Last Updated : 29 Dec 2020 08:10 PM
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 2 மாதங்களாகப் போராடி வரும் விவசாயிகளுடன் 6-வது கட்டப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விடுத்த அழைப்பை விவசாய சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.
திட்டமிட்டபடி நாளை டெல்லியில் 6-வது கட்டப் பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும், 40 விவசாய சங்கங்கள் கொண்ட சம்யுக்த கிசான் மோர்ச்சாவுக்கும் இடையே நடைபெற உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டன என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 5 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. இதற்கிடையே 6-வது கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
6-வது கட்டப் பேச்சுவார்த்தையை டிசம்பர் 30-ம் தேதி நடத்தலாம் என்று மத்திய வேளாண் துறைச் செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். மத்திய அரசின் அழைப்பை விவசாய சங்கங்கள் ஏற்றுக்கொண்டு இன்று பதில் கடிதம் எழுதின. இதையடுத்து நாளை பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, மத்திய வேளாண் துறைச் செயலாளர் சஞ்சய் அகர்வாலுக்கு இன்று எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விவசாயிகள் அமைப்பினர் போராடி வருகிறார்கள். குறிப்பாக நாங்கள் 4 அம்சங்களை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வருகிறோம்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும், தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்த வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த வேண்டும், தேசியத் தலைநகர் மண்டலம் மற்றும் அதுசார்ந்த பகுதிகளில் காற்றின் தரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆணையம், விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இந்த 4 அம்சங்களும் பேசப்பட வேண்டும். நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்”.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நாளை 6-வது கட்டப் பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.
விவசாயிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் அரசின் நிலைப்பாடு, இறுதி முடிவு குறித்து அமித் ஷாவுடன் அமைச்சர்கள் ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT