Published : 29 Dec 2020 04:37 PM
Last Updated : 29 Dec 2020 04:37 PM

கோவிட் வைரஸின் மரபணு மாற்றம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு

புதுடெல்லி

கரோனா வைரஸில் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்திலிருந்து கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகளின் மாதிரிகள் இந்திய சார்ஸ்-கோவிட் – 2 மரபணு வரைபட கூட்டமைப்பின் கீழ் உள்ள (ஐஎன்எஸ்ஏசிஓஜி) 10 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கோவிட்-19 பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு உத்திகள் குறித்த தேசியப் பணிக்குழு கூட்டம் டிசம்பர் 26 அன்று நடைபெற்றது.

சார்ஸ் கோவிட்-2 வைரஸின் மரபணு மாற்று வடிவங்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்ஓபி) கடந்த 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

கடந்த நம்பர் 25 முதல் டிசம்பர் 23-ஆம் தேதி நள்ளிரவு வரை சுமார் 33,000 பயணிகள் இங்கிலாந்திலிருந்து பல்வேறு விமான நிலையங்கள் வாயிலாக இந்தியா வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இது வரை 114 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இவர்களது மாதிரிகள் கொல்கத்தா, புவனேஸ்வர், ஐதராபாத், பெங்களூரு மற்றும் தில்லியில் உள்ள 10 இந்திய சார்ஸ்-கோவிட் – 2 மரபணு வரைபட கூட்டமைப்பின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதனை அடுத்து இங்கிலாந்திலிருந்து வந்த ஆறு பயணிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. பெங்களூர் ஆய்வகத்தில் மூன்று மாதிரிகள், ஹைதராபாத் ஆய்வகத்தில் 2 மாதிரிகள், புனே ஆய்வகத்தில் 1 மாதிரியில் உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆறு பேரும் அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் பயணித்தவர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை விரிவாக கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதோடு, கண்காணிப்பு, கட்டுப்பாடு, பரிசோதனைகள், தொற்று உறுதிசெய்யப்பட்ட மாதிரிகளை மரபணு வரைபட கூட்டமைப்பு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைப்பது ஆகியவை தொடர்பான ஆலோசனைகள் மாநிலங்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், ஃபிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மாறுபட்ட கரோனா வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x