Published : 29 Dec 2020 09:08 AM
Last Updated : 29 Dec 2020 09:08 AM
பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக உறவிற்கு லவ் ஜிகாத் சட்டத்தால் சிக்கல் உருவாகி உள்ளது. இதனால், தம் முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைத்து விட்டு தேசிய அரசியலில் தீவிரம் காட்டத் தயாராகிறர் நிதிஷ்குமார்.
நாடு முழுவதிலும் நடைபெறும் காதல் திருமணங்களில் இந்து பெண்களை மணமுடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மீது ‘லவ் ஜிகாத்’ புகார் எழுந்துள்ளது. இதனால், பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்தை தடுக்க மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் அமலாகி வருகிறது.
முதல் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அமலானதை அடுத்து, மத்தியபிரதேசமும் இச்சட்டத்தை அமலாக்குவதில் இறங்கியுள்ளது. தொடர்ந்து இந்த சட்டம், பாஜக ஆதரவில் ஆளும் பிஹாரிலும் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.
இதன் மீது பாஜகவின் தோழமை அமைப்பான இந்து ஜாக்ரன் மன்சின் கூட்டம் இரண்டு தினங்களுக்கு முன் பாட்னாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிஹார் பாஜகவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் மூத்த தொண்டரும் பிஹார்-ஜார்கண்டின் பொறுப்பாளருமான டாக்டர் சுமன், ‘உபியில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டதால் பல இந்து பெண்கள்முஸ்லிமாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
பிஹாரிலும் இதுபோன்ற செயல்களிஅ தடுக்க அந்த சட்டத்தை இங்கு கொண்டு வர வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
இதன் மீது பிஹார் பாஜகவினர் வெளிப்படையாக பேசாவிட்டாலும் அதன் சில எம்எல்ஏக்கள் மதமாற்றத்தை தடுப்பதுடன், ஜனத்தொகை கட்டுப்படுத்தவும் சட்டம் அவசியம் என ஆதரவாகப் பேசி வருகின்றனர்.
இந்த செயல் அங்கு பாஜக ஆதரவில் ஆளும் ஜேடியுவை சங்கடப்படுத்தி உள்ளது. ஏனெனில், இச்சட்டம் உபியில் அமலான போது, ஜேடியுவின் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் அது தேவையில்லை என விமர்சித்து கருத்து கூறியிருந்தார்.
இதனால், மதமாற்றச் சட்டம் விவகாரத்தில் பாஜக-ஜேடியு உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.
இதை ஆமோதிக்கும் வகையில் ஜேடியுவின் செய்தித்தொடர்பாளரான கே.சி.தியாகி கூறும்போது, ‘நம் நாட்டின் பெண்கள் ஜாதி, மதங்களை கடந்து தம் விருப்பத்தின்படி யாரை வேண்டுமானாலும் மணமுடிக்க உரிமை உள்ளது.
எனவே, இந்த சட்டத்தை நாட்டின் எந்த மாநிலத்திலும் அமலாக்கத் தேவையில்லை. பிஹாரில் இதுபோன்ற மதமாற்றம் நிகழ்ந்ததாக ஒரு முன் உதாரணமும் இல்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், அருணாச்சாலப்பிரதேசத்தின் ஏழு ஜேடியு எம்எல்ஏக்களில் ஆறு பேர் பாஜகவில் இணந்ததன் மீதும் முதல்வர் நிதிஷ்குமார் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆறு பேருக்கு அமைச்சரவையில் இடமளித்து பிரச்சனையை முடிக்காமல், கட்சியில் இழுத்தது தவறு எனவும் புகார் கூறியுள்ளனர்.
இதனுடன் மதமாற்ற சட்ட விவகாரமும் விசுவரூபம் எழுப்பதால் இருகட்சிகளுக்கு இடையே விரிசல் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இதை தன்னிடம் இருந்து பதவியை பறிக்கவே பாஜக இதுபோல், நெருக்கடி அளிப்பதாகவும் முதல்வர் நிதிஷுக்கு ஒரு சந்தேகம் உள்ளது.
இதனால், பாஜகவுடனான மோதலை தவிர்க்க அவர் தம் முதல்வர் பதவியை துறந்து தேசிய அரசியலில் கவனம் செலுத்தவும் தயாராகி வருகிறார். நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஜேடியு நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பின் நிதிஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்தமுறை தனக்கு முதல்வராகும் விருப்பம் இருந்ததில்லை எனவும், பாஜக வேண்டுமானால் தம்
கட்சியினரை அப்பதட்வில் அமர்த்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT