Published : 28 Dec 2020 07:48 PM
Last Updated : 28 Dec 2020 07:48 PM
சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் மூலம் மகாராஷ்டிர அரசைக் கவிழ்க்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார்.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மிகப்பெரிய ஊழல் நடந்தது தெரியவந்தது. பிஎம்சி வங்கி சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''அரசியலில் வெல்ல முடியாத எதிரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை ஆயுதங்களாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. காங்கிரஸ், என்சிபி கட்சிகளைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்களின் பெயர்ப் பட்டியலை வைத்துக்கொண்டு, அவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி கொடுத்து பதவி விலக பாஜக அழுத்தம் கொடுக்கிறது.
கடந்த ஓராண்டாக பாஜகவைச் சேர்ந்த சில தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, உங்கள் அரசைக் கவிழ்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம் என மிரட்டுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்காததால் எங்களுக்கு அழுத்தம் கொடுத்து மிரட்டுகிறார்கள்.
என் மனைவிக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் பேசுவேன். நான் பாலசாஹேப் தாக்கரேவிடம் இருந்து வளர்ந்தவன் என்பதால், நிச்சயம் பாஜக தலைவர்களின் உண்மையை வெளிப்படுத்துவேன்.
என்னிடம் 120 பாஜக தலைவர்களின் பட்டியல் இருக்கிறது. அதை அமலாக்கப் பிரிவிடம் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய மனைவி ஒரு பள்ளியில் ஆசிரியை. பாஜக தலைவர்கள்போல் எங்களுக்கு வருமானம் இல்லை. எங்கள் வருமானம், ரூ.1,600 கோடியெல்லாம் உயரவில்லை.
அரசியல் எதிரிகளை எதிர்த்து முகத்துக்கு முகம் போராட முடியாதபோது, அரசியல் காழ்ப்புணர்ச்சி விளையாடுகிறது. இதற்கு சிவசேனா கட்சியும் சரியான பதிலடி கொடுக்கும்.
நாங்கள் சாதாரண நடுத்தர மக்கள். என் மனைவி வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் கடனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பெற்றார். அதற்கான சரியான வட்டி, அசல் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் அமலாக்கப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் ஆளும் அரசைக் கவிழ்க்க நவம்பர் மாதம் வரை பாஜக காலக்கெடு விதித்திருந்தது. ஆனால், அரசைக் கவிழ்க்க முடியவில்லை. ஆதலால், ஆளும் அரசுடன் தொடர்பில் இருக்கும் எம்எல்ஏக்களின் குடும்பத்தினர், குழந்தைகள், மனைவி ஆகியோரை பாஜக குறிவைக்கிறது.
ஆளும் மகாவிகாஸ் அகாதி அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. நோட்டீஸ் அனுப்பி எங்களைக் கைது செய்தாலும், அரசு நிலையாக இருக்கும். பாஜக செய்யும் அதே தந்திரங்களுடன் நாமும் பதிலடி கொடுப்போம் என உத்தவ் தாக்கரே என்னிடம் தெரிவித்துள்ளார். எங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராகக் குடும்ப உறுப்பினர்களை ஈடுபடுத்த மாட்டோம்''.
இ்வ்வறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT