Published : 28 Dec 2020 06:28 PM
Last Updated : 28 Dec 2020 06:28 PM
காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள் விழா இன்று கொண்டாடப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்கவில்லை.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி கொடியேற்றினார். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிறுவன விழாவில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். ஆதலால், காங்கிரஸ் கட்சியின் நிறுவன நிகழ்ச்சியில் கூட சோனியா காந்தி பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் வெளிநாடு புறப்பட்டுவிட்டார். ராகுல் காந்தி எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார் எனக் காங்கிரஸ் கட்சி தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், இத்தாலியில் உள்ள தனது தாய்வழிப் பாட்டியைச் சந்திக்க மிலன் நகருக்குச் சென்றுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்திருந்த பிரியங்கா காந்தியிடம், ராகுல் காந்தி திடீர் வெளிநாடு பயணம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் பதில் ஏதும் கூறாமல் மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பங்கேற்காதது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் அந்த மாநிலத்தின் வயநாடு எம்.பி. எனும் முறையில் ராகுல் காந்தி அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும்.
ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக மாநிலப் பொறுப்பாளர் தாரிக் அன்வர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT