Published : 28 Dec 2020 07:37 AM
Last Updated : 28 Dec 2020 07:37 AM

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் நேரத்தில் ‘எங்களது மனதின் குரலை கேட்க வேண்டும்’- டெல்லி எல்லையில் ஓசை எழுப்பி விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி

எங்களது 'மனதின் குரலை' கேளுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த வரிசையில் பிரதமரின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பு செய்யப்பட்டது. அப்போது விவசாயிகள், கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடக்க நிலையில் இருந்த போது, கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்
யப்பட்டது. அப்போது, கரோனா வைரஸுக்கு எதிராக போராடிய சுகாதார பணியாளர்களை உற்சாகப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் மணியோசை எழுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதே பாணியில், டிசம்பர் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 'மனதில் குரல்' வானொலி உரை ஒலிபரப்பு செய்யப்படும் போது, நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஓசை எழுப்ப வேண்டும் என்று பல்வேறு விவசாய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இதன்படி, டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று பாத்திரங்கள், தகரங்களை தட்டி ஓசை எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தட்டு, தகரங்களை தட்டியபடி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதேபோல பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலும் ஓசை எழுப்பி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து ஹரியாணா மாநில பாரதிய கிசான் கூட்டமைப்பின் தலைவர் குர்நாம் சிங் கூறும்போது,``புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி தொடர்ந்து ஒரு மாதமாகபோராட்டம் நடத்தி வருகிறோம். எங்களது மனதின் குரலையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x