Published : 28 Dec 2020 07:29 AM
Last Updated : 28 Dec 2020 07:29 AM
காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் வரும் மார்ச் 31-ம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அரசு அலுவலக பணிகளும் முடங்கின.
இதன்காரணமாக, பிப்ரவரி 2020 முதல் காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம், பல்வேறு வாகனங்களின் ஆர்.சி., பர்மிட், தகுதிச் சான்று ஆகியவற்றை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, காலாவதியான இந்த ஆவணங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் அவ்வப்போது இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக டிசம்பர் 31 வரை ஆவணங்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த சலுகையை 2021 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அமைச்சகம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘கடந்த பிப்ரவரி முதல் காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் 2021 மார்ச் 31 வரை செல்லத்தக்கதாக கருதப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
வாகனங்கள் முடக்கம்
கரோனா பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டாலும், தங்கள் வாகனங்கள் அனைத்தையும் இயக்க முடியாத சூழல் உள்ளதால் சலுகையை நீட்டிக்க வேண்டும் என வர்த்தக வாகனஉரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், அவற்றுக்கான வாகனங்கள் முற்றிலும் முடங்கிக்கிடக்கின்றன.
எனவே, அவற்றின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாத சூழல் நிலவுவதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று, சலுகை காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT