Published : 27 Dec 2020 04:22 PM
Last Updated : 27 Dec 2020 04:22 PM
காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரி உட்பட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நால்வர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்காம் மாவட்டத்தின் ஹயத்போரா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் இயங்கி வருவது குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
''போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பகுதி வழியே ஒரு வாகனம் மூலம் சிலர் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால், தீவிரவாதிகளின் வாகனத்தைப் பாதுகாப்புப் படையினர் தந்திரமாகச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். எனினும் அவர்கள், பாதுகாப்புப் படையினரை எதிர்க்க முயன்றனர். இறுதியில் அனைவரும் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறப்பு காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்த அல்தாப் உசேன் என அடையாளம் காணப்பட்டார். இவர் எந்தவிதத் தகவலும் இன்றி காவல்துறையிலிருந்து ரகசியமாக வெளியேறி தீவிரவாதியாக மாறியவர்.
மற்ற மூவரும் புல்வாமாவில் வசிக்கும் ஷபீர் அஹ்மத் பட், ஜம்ஷீத் மக்ரே மற்றும் ஜாஹித் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உசேன் காவல் படையை விட்டு வெளியேறினார். ஜஹாங்கீர் என்பவருடன் சேர்ந்துகொண்டு இரண்டு ஏ.கே.47 ரகத் துப்பாக்கிகளுடன் அவர் வெளியேறியிருந்தார். ஜஹாங்கீர் ஏற்கெனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணையில், இந்தத் தீவிரதிவாகள் அனைவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது உடன் தொடர்புடையவர்கள் என்பதும், தாக்குதலில் ஈடுபடும் சதித்திட்டங்களுடனும் இப்பகுதியில் செயல்பட்டு வருவதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேபோல இன்னொரு சம்பவத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய நால்வர் பூஞ்ச் மாவட்டத்திலும் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் ஆரி கிராமக் கோயிலை தகர்க்கும் சதித்திட்டத்தோடு செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
2019-ல் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி 40 ராணுவ வீரர்களைக் கொன்றவர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதக் குழுவினர். இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இயங்கிவந்த ஜெய்ஷ் இ முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT