Published : 27 Dec 2020 03:37 PM
Last Updated : 27 Dec 2020 03:37 PM
2021, ஜனவரி மாதம் முதல் எல்இடி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை 10 சதவீதம் வரை உயர்கிறது என உற்பத்தியாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய உள்ளீட்டுப் பொருட்களான காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்றவற்றின் விலை அதிகரிப்பாலும், விமானத்தில் இருந்து கொண்டுவரும் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பாலும் இந்த விலை உயர்வு இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அளவில் சப்ளை குறைவால், டி.வி. பேனல்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், பிளாஸ்டிக் விலையும் அதிகரித்துள்ளது. மூலப் பொருட்கள் விலை உயர்வால் வேறு வழியின்றி விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக எல்.ஜி. பேனசோனிக், தாம்ஸன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சோனி நிறுவனம் விலை உயர்வு குறித்து ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து பேனசோனிக் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ மணிஷ் சர்மா கூறுகையில், “ உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு எங்கள் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும். ஜனவரி முதல் 6 முதல் 7 சதவீதம் விலை உயர்த்தப்படலாம், மார்ச் மாதத்துக்குள் 10 சதவீதம் வரை உயரக்கூடும்’’ எனத் தெரிவித்தார்.
எல்ஜி எலெக்ட்ரானிஸ்க் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் விஜய் பாபு கூறுகையில், “ஜனவரி முதல் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்தபட்சம் 7 முதல் 8 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் வேறு வழியில்லாமல் பொருட்களின் விலையை உயர்த்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கோத்ரேஜ் அப்லையன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கமால் நந்தி கூறுகையில், “மூலப்பொருட்களைக் கொண்டுவரும் விமானப் போக்குவரத்துக் கட்டணம் 6 மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் உற்பத்தியாளர்களுக்குத்தான் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் வேறுவழியின்றி ஜனவரி முதல் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை 8 முதல் 10 சதவீதம் உயர்த்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT