Last Updated : 27 Dec, 2020 03:12 PM

8  

Published : 27 Dec 2020 03:12 PM
Last Updated : 27 Dec 2020 03:12 PM

தமிழக ஆசிரியைக்குப் பாராட்டு; வெளிநாட்டுப் பொருட்களுக்கு மாற்றாக இந்தியப் பொருட்கள் வர வேண்டும்: பிரதமர் மோடி 'மன் கி பாத்'தில் பேச்சு

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

வெளிநாட்டுப் பொருட்களுக்கு மாற்றாக இந்தியப் பொருட்கள் உருவாக வேண்டும். இந்தியப் பொருட்கள் உலகத் தரம்வாய்ந்தவை என்று ஒவ்வொரு இடத்திலும் பேசப்படுவதை இந்தியத் தயாரிப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியை என்.கே.ஹேமலதா கரோனா காலத்தில் புத்தாக்க முயற்சியுடன் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்ததையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 72-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''2020-ம் ஆண்டின் கடைசி 'மன் கி பாத்' நிகழ்ச்சி இதுதான். புத்தாண்டுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. மக்கள் இந்த ஆண்டில் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பெருந்தொற்றால், எப்போதுமில்லாத வகையில் லாக்டவுன் கொண்டுவரப்பட்டது. இந்தப் பெருந்தொற்று நோய் பல்வேறு மாற்றங்களைப் புகுத்தியுள்ளது. மக்களுக்குப் பொருட்களை வழங்கும் சப்ளை செயின் பாதித்துள்ளது. சவால்களில் இருந்து மக்கள் பாடம் கற்றுள்ளார்கள்.

மக்களிடம் புதிய உத்வேகத்தைப் பார்க்கிறேன். 2020-ம் ஆண்டில் உள்நாட்டில் தயாரிப்போம் எனும் முழக்கத்துக்கு உத்வேகம் கிடைத்துள்ளது.

நாம் அனைவரும் உள்நாட்டுப் பொருட்களுக்கு ஆதரவு அளிக்கும்போது, உற்பத்தியாளர்களுக்குத் தெளிவான செய்தி கிடைத்தால், அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தில் எந்தவிதத்திலும் சமரசம் செய்யக்கூடாது.

உள்நாட்டுப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் எனும் முழக்கம் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்க வேண்டும். நம்முடைய பொருட்கள் சர்வதேச தரத்தை எட்ட வேண்டும். உலகத் தரத்துக்கானது எதுவோ அந்தப் பொருட்களைத் தயாரித்து, நம்மை நாம் நிரூபிக்க வேண்டும்.

நான் உங்களுக்கு சுவாரஸ்யமான தகவல் ஒன்றைக் கூறுகிறேன். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டுவரை இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனப்பகுதிகளும் அதிகரித்துள்ளன. வனங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க அரசு மட்டுமல்லாமல் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உழைக்கின்றன.

கோவையைச் சேர்ந்த காயத்ரி எனும் பெண், தனது தந்தையின் உதவியால், நாய்க்கு சக்கர நாற்காலி அமைத்துக் கொடுத்துள்ளார். மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும் இந்த நிகழ்வை சமூக ஊடகங்களில் நாம் காணலாம். டெல்லி, என்சிஆர் பகுதியில் வீடில்லாமல், தங்குமிடம் இல்லாம் இருக்கும் விலங்குகளுக்கு இடங்களையும், உணவுகளையும், குடிநீரையும் வழங்க வேண்டும்.

யுவ பிரிகேட் எனும் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கபட்டிணம் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலைப் புனரமைத்துள்ளார்கள். இந்த இளைஞர்களைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. எதையும் செய்ய முடியும் எனும் உத்வேகம் இருக்கிறது.

இந்த ஆண்டு மே மாதம் காஷ்மீரின் குங்குமப் பூவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. உலக அளவில் காஷ்மீர் குங்குமப் பூவின் பெருமையைக் கொண்டுசெல்ல வேண்டும்.

தமிழகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை என்.கே.ஹேமலதா பற்றி அறிந்தேன். விழுப்புரத்தில் ஒரு பள்ளியில் பழமையான தமிழ் மொழியைக் கற்பித்து வருகிறார்.

கரோனா வைரஸ் காலத்தில்கூட தனது கற்பிக்கும் திறனில் தடைகள் ஏற்படாமல் வித்தியாசமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தியுள்ளார். சவால்கள் நிச்சயம் நமக்கு இருக்கும். அதை நாம் புத்தாக்கமான வழியில் எதிர்கொள்ள வேண்டும்.

ஆசிரியை ஹேமலதா பாடத்தின் 53 பிரிவுகளையும், விலங்குகளைக் கொண்ட வீடியோவாக மாற்றி, அதே பென் டிரைவில் பதிவேற்றம் செய்து, மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த வசதி மாணவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளது. பாடங்களை வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களையும் தொலைபேசி வாயிலாக மாணவர்களுக்குத் தீர்த்து வைத்துள்ளார். இதுபோன்ற கல்வி, மாணவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளது.

ஆசிரியர்கள் தங்கள் பாடங்களை மத்திய அரசின் தீக்ஷா தளத்தில் பதிவேற்றம் செய்தால் தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்கள் அதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x