Published : 27 Dec 2020 09:47 AM
Last Updated : 27 Dec 2020 09:47 AM
ஜனநாயகத்தின் வீழ்ச்சி தொடங்கிவி்ட்டது. இதற்கு பாஜகவோ அல்லது மோடி அமித் ஷா அரசோ பொறுப்பல்ல. பலவீனமான எதிர்க்கட்சிகள்தான் காரணம். எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால்தான் விவசாயிகள் பிரச்சினையைகூட மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்று சிவசேனா கட்சி விளாசியுள்ளது
சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் நேற்று தலையங்கம் எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அதன் தலைமையைப் பலப்படுத்த வேண்டும்.
டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
ஆனால், ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு விவசாயிகள் இயக்கம் குறித்து கவலைப்படவில்லை. விவசாயிகள் பிரச்சினைக்கு மத்திய அரசு அதிகமான அக்கறை காட்டவில்லை, கண்டுவில்லை என்றால் அதற்குக் காரணம், வலிமையில்லாத எதிர்க்கட்சிகள்தான்.
ஜனநாயகத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. இதற்கு பாஜகவோ அல்லது மோடி, அமித் ஷா அரசோ காரணமல்ல. ஆனால், எதிர்க்கட்சிகளுக்குத்தான் இதற்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது. இப்போதுள்ள சூழலில், மத்திய அரசை குறை சொல்வதைவிட, எதிர்க்கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்வது அவசியம்.
எதிர்க்கட்சிகளுக்கு தற்போது பொதுவான தலைமை தேவை. நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் திவால்நிலையின் எல்லையில் முழுமையாக நிற்கின்றன. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஒன்று இருந்தாலும், அது சில தொண்டு நிறுவனங்களைக் கொண்ட அமைப்புபோலத்தான் செயல்படுகிறது.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தவிர எந்தக் கட்சியும் வீரியமாகச் செயல்படவில்லை. மகாவிகாஸ் அகாதி கூட்டணியின் முக்கிய அங்கமான தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார் தனித்துவமாக தேசிய அளவில் செயல்படுகிறார்.
மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்த்து மம்தா பானர்ஜி தனி ஆளாக போராடி வருகிறார். இந்த நேரத்தில், நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் மம்தாவுக்கு ஆதரவாக துணையாக நிற்பது அவசியம்.
சரத் பவாருடன் மம்தா பானர்ஜி நேரடியாக ஆலோசனை நடத்தியைத் தொடர்ந்து மேற்கு வங்கத்துக்கு சரத்பவார் செல்கிறார். காங்கிரஸின் தலைமை இதுபோன்று செயல்படுவது அவசியமானது. வரலாற்று சிறப்பு மிக்க காங்கிரஸ் போன்ற கட்சிக்கு கடந்த ஓர் ஆண்டாக முழுநேரத் தலைமைகூட இல்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகவும் சோனியா காந்தி இருந்து வருகிறார். ஆனால், மூத்தத் தலைவர்கள், வயதான தலைவர்கள் தற்போது யாரையும் காணமுடியவில்லை.
குறிப்பாக மோதிலால் வோரா, அகமது படேல் போன்ற தலைவர்கள் காலமாகிவிட்டனர். இதுபோன்ற சூழலில், காங்கிரஸ் கட்சியை யார் வழிநடத்துவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் எதிர்காலம் குழப்பமாக இருக்கிறது.
ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் பாஜகவை எதிர்த்து வீரியமாகப் போராடி வருகிறார் ஆனால், ஏதோ அவரிடம் இல்லாதது போன்று இருக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா, அகாலி தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானாவின் டிஆர்எஸ், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், கர்நாடகாவில் குமாரசாமி ஆகியோர் பாஜகவை எதிர்க்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைவதற்கு இந்தக் கட்சிகளின் தலைவர்கள் தயாராக இல்லை. பாஜகவுக்கு எதிரான அணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இந்தக் கட்சிகள் சேராதவரை, பாஜக அரசுக்குள், எதிர்க்கட்சிகளின் அம்பு ஊடுருவாது.
காங்கிரஸ் கட்சியின் தலைமை சரியான நேரத்தில் செயல்படாவிட்டால், ஒவ்வொருவருக்கும் அடுத்துவரும் காலம் மிகவும் கடினமாகிவிடும். அழிந்துவரும் கிராமத்தின் நில உரிமையாளர்கள் நிலைதான் தற்போது எதிர்க்கட்சிகளின் நிலை இருக்கிறது.
இந்த ஜமீன்தாரிகள் எதையும் தீவிரமாக எடுக்கவில்லை, கவனம் செலுத்தவில்லை என்பதால்தான், கடந்த 30 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அழிந்துவரும் கிராமத்தை உடனடியாக சரி செய்து புனரமைக்க வேண்டும்.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT