Published : 27 Dec 2020 08:52 AM
Last Updated : 27 Dec 2020 08:52 AM
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும், தேர்வு நடத்தப்படும் தேதிகள் குறித்து வரும் 31-ம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிக்க உள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிரிவில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்று வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 15-ம் தேதிப்பின் சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.
இதனால், மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத் திட்டத்தில் 30 சதவீதம் வரை குறைத்து, பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது.
மேலும், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்துக்களைக் கேட்டறிந்தார். கடந்த 22-ம் தேதி ஆசிரியர்களுடனும் அமைச்சர் பொக்ரியால் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அமைச்சர் பொக்ரியால், “ ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. பிப்ரவரி 2021-க்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும்.
பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு எழுத்து முறையிலேயே நடத்தப்படும். ஆன்லைன் மூலம் நடத்தப்படுவது சாத்தியமாகாது அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியப்படாது. 30 சதவீதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகப்பெரிய அறிவிப்பு. 2021-ம் ஆண்டில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது நடக்கும் என்பதற்கான தேதிகளை வரும் 31-ம் தேதி நான் அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக செய்முறைத் தேர்வுகள் ஜனவரி மாதமும், எழுத்துத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் முடியும். ஆனால், சூழலை ஆய்வுசெய்து, அனைத்து தரப்பினருடன் ஆலோசித்து தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
இதுவரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லாததால், பல்ேவறு பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பொதுத்தேர்வுக்கு தயாரும் வகையில் பயிற்சித் தேர்வுகளை நடத்தத் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT