Published : 26 Dec 2020 04:04 PM
Last Updated : 26 Dec 2020 04:04 PM
ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் அரசு நடத்துகின்றனர், உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடப்படவில்லை என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை வழங்கும் திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம்.
பிரதமர்-ஜெய்யுடன் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சை பெறலாம். ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஆயுஷ்மான் பாரத் ஜெய் செஹத் திட்டம் காஷ்மீர் மக்களுக்கு அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்துள்ளனர். மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வெளியே வந்து வளர்ச்சிக்கு வாக்களித்தனர். மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய பார்வையை ஜம்மு-காஷ்மீர் வென்றுள்ளது.
புதுச்சேரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும், பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் அரசாங்கம் நடத்துகின்றனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT