Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் நேற்று ஏழுமலையானை தரிசித்தனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை அபிஷேகத்திற்கு பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. விஐபி பக்தர்கள், வாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்ற பக்தர்கள் முதலில் சொர்க்க வாசல் வழியாக மூலவரை வழிபட்டனர். அதன் பின்னர் காலை 7.30 மணி முதல் சாமானிய பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு வரும் ஜனவரி 3-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இணையதளம் மூலம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களும், திருப்பதியில் உள்ள 5 மையங்கள் மூலம் சர்வ தரிசன டோக்கன்களும் விநியோகம் செய்யப்பட்டன.
நேற்று காலையில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் உற்சவரான மலையப்பர் தேவி, பூதேவி சமேதமாய் தங்கத் தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தங்கத்தேரை பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
ரூ.1 கோடி நன்கொடை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அர்விந்த் பாப்டே தனது குடும்பத்தாருடன் நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். இதேபோல தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான குமரகுரு, தனது தொகுதியில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டியிடம் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT