Published : 25 Dec 2020 09:32 AM
Last Updated : 25 Dec 2020 09:32 AM
இந்தியாவை வலிமையாகவும், செழுமையாகவும் மாற்றிய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் முயற்சிகள் எப்போதும் நினைவு கூறப்படும் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த ஏ.பி.வாஜ்பாயின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
அதில் “ வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, தேசத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்று, எப்போதுமில்லாத வளர்ச்சியை எட்ட உதவியது. இந்தியாவை வலிமையாகவும், செழுமையாகவும் மாற்ற வாஜ்பாய் மேற்கொண்ட முயற்சிகள் எப்போதும் நினைவுகூறப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். குடியரசுத் த லைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாாரமன் ஆகியோரும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே வாஜ்பாயின் வாழ்க்கை, பொதுவாழ்க்கையில் அவரின் பணிகள், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய சிறப்பான உரைகள்,புகைப்படங்கள், ஆகியவை அடங்கிய நூலை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.
மக்களவைச் செயலாளர் சார்பில் இந்த நூல் வெளியிடப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மைய மண்டபத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி வாஜ்பாயின் உருவப்படம் வைக்கப்பட்டது.அந்த உருவப்படத்துக்கு இன்று மலர்கள் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
அதன்பின் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், வாஜ்பாய் குறித்த நூலை பிரதமர் மோடி வெளியிடுகிறார். வாஜ்பாயின் பிறந்தநாளை சிறந்த நிர்வாக நாளாக மத்தியஅரசு கடைபிடிக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு வாஜ்ய்பாக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டிலேயே சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான கோவிந்த் பல்லப் பந்த் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT