Published : 25 Dec 2020 07:51 AM
Last Updated : 25 Dec 2020 07:51 AM
மேற்கு வங்க மண்ணை மதிக்கிறோம், அதை பாதுகாக்கிறோம். மேற்கு வங்கத்தை குஜராத்தாக அனுமதிக்க மாட்டேன் என்று என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும்இடையேதான் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது மம்தா பானர்ஜி தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பா.ஜ.க.வை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
கொல்கத்தாவில் சங்கீத் மேளா 2020 என்ற இசை கண்காட்சியை மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது:
இசைக்கு எல்லைகள் கிடையாது. பிரிவினைகளில் நம்பிக்கை கொள்ளாதீர்கள் என்று சங்கீத் மேடையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இசை மேடை ஒருபோதும் பிரிவினையை நம்பாது. அதேபோல் மனித வாழ்க்கையை பிரிக்க முயற்சி செய்தால் அது முடியாது.
நமது முகங்கள், சைகைகள் மற்றும் நிறங்கள் மட்டுமே வேறுப்பட்டது ஆனால் நாம் அனைவரும் ஒன்றே. யாரையும் பிரிக்க அனுமதிக்காதீர்கள்.
யாராவது ஒருவர் இன்குலாப் சொன்னால், நேதாஜியின் ஜெய் ஹிந்த் சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்தும் வங்கத்திலிருந்து வந்தவை. நாம் அனைவரும் ஒன்றான ஒரே குடும்பம். இதுதான் மனிதகுலம். அதை பிரிக்க நினைப்பவர்களுக்கு எதிராக போராட வேண்டும்.
நாம் நம் மண்ணை மதிக்க மற்றும் பாதுகாக்க வேண்டும். மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது. மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதற்கிடையே மேற்கு வங்கத்தில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை என்று பாஜக குற்றம்சாட்டும் நிலையில், தன்னை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ விஸ்வ பாரதி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவுக்கு எனக்கு எந்தவிதமான அழைப்பும் விடுக்கவில்லை. இருப்பினும் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் 100 ஆண்டு பெருமையாக வாழ்ந்துள்ளது என்று ட்விட்டரில் வாழ்த்தும் தெரிவித்தேன்
ஆனால், விஸ்வ பாரதி பல்கலைக்கழத்தினர் நேற்று என்னிடம் விஸ்வ பாரதி பல்கலைக்கழக அடுத்தகட்ட விழாவுக்கு வர வேண்டும் என திடீரென அழைப்பு விடுத்தனர். ஆனால், 28, 29-ம் தேதிகளில் போல்பூர் செல்கிறேன்,6 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் முடியாது எனத் தெரிவித்தேன்.
நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் மீது பாஜக நிலஅபகரிப்பு குற்றச்சாட்டு கூறுகிறது. நான் அமர்த்தியா சென் மீது அதிகமான மதிப்பு வைத்திருக்கிறேன். சாந்திநிகேதன் நிலத்தை அமர்த்தியா சென் ஆக்கிரமித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை நீங்களோ, நானோ நம்பமுடியுமா.
பாஜகவின் சித்தாந்தங்களுக்கு அமர்த்தியா சென் எதிராக இருப்பவர் என்பதால் அவர் மீது வீண் பழி போடுகிறார்கள். மேற்கு வங்கம் சார்பில் அமர்த்தியா சென்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன்” எனத் தெரிவி்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT