Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையானை சொர்க்க வாசல் வழியாக 10 நாட்களுக்கு தரிசிப்பதற்கான தர்மதரிசன டோக்கன்கள் நேற்றுஒரே நாளில் வீற்றுத் தீர்ந்துவிட்டது.
அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் இன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. இரவுமுதலே திரளான பக்தர்கள் முக்கிய கோயில்கள் முன்பு காத்திருந்து சொர்க்க வாசல் வழியாக மூலவரை தரிசித்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை சொர்க்க வாசல் வழியாக தரிசனம் செய்ய இம்முறை அதிகாலை முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே இணையவழியில் விற்றுத் தீர்ந்து விட்டன. தர்ம தரிசன டிக்கெட்களும் கரோனா பரவல் காரணமாக திருப்பதி பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் வரும் ஜனவரி 3-ம் தேதி வரை திருமலைக்கு வரவேண்டாமென தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனாலும் தமிழகம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். டிக்கெட் இல்லாத பக்தர்களை அலிபிரியிலேயே அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பதியில் ஏற்பாடு செய்யப்பட்ட 5 மையங்களில் தர்ம தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று ஆதார் அட்டைகளை காண்பித்து டிக்கெட்களை பெற்றுச் சென்றனர்.
திருப்பதி நகர பக்தர்களுக்கு மட்டுமே நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் வீதம், 10 நாட்களுக்கு 1 லட்சம் டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தாலும், சில வெளி மாநில பக்தர்களுக்கும் தர்ம தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனால், ஒரு லட்சம் டிக்கெட்களும் நேற்று ஒரே நாளில் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT