Published : 24 Dec 2020 04:59 PM
Last Updated : 24 Dec 2020 04:59 PM
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மூத்த தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி இப்போதிருந்தே நிலவி வருகிறது. 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க மம்தா போராடி வருகிறார், ஆனால், ஆட்சியைப் பிடிக்க பாஜக பல்வேறு காய்களைத் திட்டமிட்டு நகர்த்தி வருகிறது.
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக மேற்குவங்கம் சென்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
மிட்னாப்பூரில் பிரமாண்ட பேரணியில் பங்கேற்று அவர் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி. ஒருவர் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த விலகிய மூத்த தலைவரும், கேபினட் அமைச்சராக இருந்தவருமான சுவேந்து அதிகாரி,
இது தவிர திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சில்பேந்திர தத்தா, தபாசி மண்டல், அசோக் திண்டா, சுதீப் முகர்ஜி, சாய்காந்த் பாஞ்சா, திபாளி பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, சியாம்டா முகர்ஜி, பிஸ்வாஜித் குண்டா, பன்சாரி மெயிட்டி ஆகிய 11 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்தனர்.
இவர்களை தவிர தற்போதைய எம்.பி, முன்னாள் எம்.பி. உட்பட பல முக்கியத் தலைவர்களும் பாஜகவில் அமித் ஷா முன்னிலையில் இணைந்தனர். 2-வது நாள் போல்பூரில் திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார்.
திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து வலிமையான கூட்டணியை அமைப்பது குறித்து பேசி வந்தன. மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி கூறியதாவது:
மேற்குவங்க மாநிலத்தில் முதலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தவர் மம்தா பானர்ஜி தான். மதவாத கட்சியை இருகரம் கூப்பி வரவேற்ற அவர் தற்போது அந்த கட்சியை எதிர்க்க முடியாமல் தவிக்கிறார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை ஒப்புதல் தெரிவித்துள்ளது. பாஜகவை எங்கள் அணி வீழ்த்தும்.’’ எனக் கூறினார்.
கடந்த சில நாட்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி மாதம் மீண்டும் மேற்குவங்கம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மேற்குவங்க மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில் ‘‘விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12-ம் தேதி அல்லது சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதி சிறப்புக் கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளோம். சுபாஷ் சந்திரபோஸ் நூற்றாண்டு விழாவும் தொடங்கவுள்ளது. எனவே இதில் ஒரு நிகழ்ச்சிக்கு அமித் ஷாவை அழைக்க திட்டமிட்டுள்ளோம்.ஓரிரு நாட்களில் பயணத் திட்டம் இறுதி செய்யப்படும்’’ எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT