Last Updated : 24 Dec, 2020 12:32 PM

2  

Published : 24 Dec 2020 12:32 PM
Last Updated : 24 Dec 2020 12:32 PM

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங். மூத்த தலைவர்கள் கைது: ராகுல் காந்திக்கு அனுமதி

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டபோது பேட்டி அளித்தகாட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையொப்பம் பெற்றுள்ளதைக் கொடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.

அதேசமயம், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட சிலர் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 5 கட்டப் பேச்சு விவசாயிகளுக்கும், மத்திய அ ரசுக்கும் இடையே நடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே வேளாண் சட்டங்கள் கொண்டுவந்த போதிருந்தே காங்கிரஸ் கட்சி தீவிரமாக எதிர்த்து வந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்தி இந்தச் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் கையொப்பம் பெற்றுள்ளது.

இந்த கையொப்பத்துடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் உடனடியாக தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவரக் கோர காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

இதன்படி குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில், பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட் காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாகச் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காலை சென்றனர்.

ஆனால், பேரணி செல்வதற்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை. காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணி செல்ல தொடர்ந்து முயன்றபோது, போலீஸார் அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.

அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நிருபர்களிடம் கூறுகையில் “ நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள். குடியரசுத் தலைவரைச் சந்திக்க எம்.பி.க்களுக்கு உரிமை உண்டு, அவர்களை அனுமதிக்க வேண்டும். எங்களை அனுமதிப்பதால் என்ன சிக்கல் வரப் போகிறது.

லட்சக்கணக்கான விவசாயிகளின் குரல்களை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய அ ரசுக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பும் இருந்தால், அவர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கிறார்கள். நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்த பேரணியை நடத்துகிறோம்.

சில நேரங்களில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துவிட்டது, எதிர்க்கட்சியாகக் கூட தகுதி பெறமுடியவில்லை என்று மத்திய அரசு கூறுகிறது.

சில நேரங்களில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்கிறது, டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்டியுள்ளது என்கின்றனர். முதலில் நாங்கள் யார் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

மத்திய அரசு அகங்காரத்துடன் செயல்படுகிறது. அவர்கள் வழியில்தான் அரசியல் செய்கிறார்களேத் தவிர, விவசாயிகள் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் மரியாதை இல்லை.விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் தேசவிரோதிகள் என முத்திரையிடுவது பாவம். விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, அதை தீர்த்துவைக்க வேண்டியது மத்திய அ ரசின் கடமை” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளி்ட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து 2 கோடி கையொப்பங்களை அளித்து, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி கூற வேண்டும் என வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x