Published : 23 Dec 2020 03:01 PM
Last Updated : 23 Dec 2020 03:01 PM
உலகம் முழுவதும் 23 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இந்தியாவில் எப்போது தொடங்கப்படும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி” இன்னும் சில வாரங்களில் கரோனா தடுப்பூசி தயாராகிவிடும்.அதை மக்களுக்கு வழங்க முழுவீச்சில்அரசு தயாராகி வருகிறது”எ னத் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களின் 3 கரோனா தடுப்பூசிகள் உள்பட 5 தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன. இதில் கோவாக்ஸின் மருந்து 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கிறது. இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அமெரி்க்கா, பிரிட்டனில் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 6 லட்சம் பேருக்கும், பிரிட்டனில் 5 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, சீனாவிலும், ரஷ்யாவிலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் எப்போது கரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கும் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வரைபடத்தை வெளியிட்டு பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி வெளியி்ட்ட வரைபடத்தில் சீனாவில் இதுவரை 10 லட்சம் பேரும், அமெரி்க்காவில் 6 லட்சம் பேரும், பிரிட்டனில் 5 லட்சம் பேரும், ரஷ்யாவில் 2 லட்சம் பேரும் என மொத்தம் 23 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி தனது பதிவில் “ சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரி்க்கா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது, எப்போது தொடங்குவீர்கள் மோடிஜி” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பூசிக்கு இதுவரை இந்தியா எந்த நிறுவனத்துக்கும் அனுமதியளிக்கவில்லை. சீரம், பைசர், பாரத் பயோடெக் நிறுவனங்கள் அவசரகாலப் பயன்பாட்டுக்கு தங்கள் மருந்தை அனுமதிக்கும்படி, இந்திய மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT