Published : 22 Dec 2020 06:59 PM
Last Updated : 22 Dec 2020 06:59 PM
கரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிடுவதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், ஒருபோதும் ருசியாகச் சாப்பிடுவதைக் குறைக்கவும் இல்லை. தவிர்க்கவும் இல்லை. லாக்டவுன் நேரத்தில் தேவைக்கும் பல ருசியான உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து நன்றாகச் சாப்பிட்டுள்ளனர்.
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம் 2020-ம் ஆண்டு லாக்டவுன் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 5-வது ஆண்டாக ஆய்வு நடத்தி ஸ்விக்கி நிறுவனம் ருசிகரமான தகவல்களை அளிக்கிறது.
அந்த வகையில் இந்தியாவில் பிரியாணி பிரியர்கள் இன்னும் குறையவில்லை என்பதையே இந்த ஆண்டு ஸ்விக்கி ஆர்டர் பட்டியலில் காட்டுகிறது. 2020-ம் ஆண்டில் அதிகமாக உணவு ஆர்டர் செய்யப்பட்ட பட்டியலில் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட பிரியாணி வகைகள் முதலிடத்தில் உள்ளன.
அதாவது ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு பிரியாணிக்கும் மேலாக ஆர்டர்கள் ஸ்விக்கியில் பதிவாகியுள்ளன. அதிலும் இந்தியர்களின் முதலிடமாக இருப்பது நாவில் எச்சில் ஊறவைக்கும் சிக்கன் பிரியாணிதான். இந்த 2020-ம் ஆண்டில் புதிதாக 3 லட்சம் ஸ்விக்கி பயன்பாட்டாளர்கள் வந்தும், அவர்களின் முன்னுரிமையும் சிக்கன் பிரியாணியாகவே இருக்கிறது.
ஆனால், சைவ பிரியாணிக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லை. ஒரு சைவ பிரியாணி ஆர்டர் வரும் நேரத்துக்குள், 6 சிக்கன் பிரியாணிக்கு ஆர்டர் வந்துள்ளது.
மசால் தோசை, தேநீர்
இந்த இரு உணவுகளுக்கும் அடுத்ததாக மக்கள் விரும்பி ஆர்டர் செய்தது மசால் தோசை. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 5 உணவுகளை மக்கள் அதிகமாக ருசித்துச் சாப்பிட்டுள்ளனர். சிக்கன் பிரியாணி, மசால் தோசை, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் பிரைடு ரைஸ், கார்லிக் பிரட் ஸ்டிக்.
அதுமட்டுமல்லாமல் கேப்பசினோ, பல்வேறு சுவைகளில் கிடைக்கும் தேநீர், சாலைகளில் கிடைக்கும் பானிபூரி, பேல் பூரி போன்ற உணவுகளும் ஸ்விக்கியில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
கரோனாவால் அலுவலகத்துக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் இருந்து பணியாற்றியவர்கள் தங்கள் நினைவுகளை மறக்க முடியாமல் கேப்பசினோ, மசாலா தேநீர், பல்வேறு வகைகளில் காபி போன்றவற்றை அதிகமாக ஆர்டர் செய்துள்ளார்கள்.
பானி பூரி
இந்த 2020-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் தவறவிட்டது பானி பூரியைத்தான். சமூக விலகல் இன்றிக் கூட்டமாக நின்றுகொண்டு பானி பூரியைச் சாப்பிடும் அந்தத் தருணத்தை இந்தியர்கள் பலர் இழந்துவிட்டார்கள். இருப்பினும் லாக்டவுன் நேரத்திலும் ஸ்விக்கி நிறுவனம் பானி பூரியை டெலிவரி செய்துள்ளது.
அந்த வகையில் இந்தியர்களுக்கு லாக்டவுன் நேரத்தில் 2 லட்சம் பானிபூரிகளை ஸ்விக்கி நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.
அதிகாலை 4.59 மணிக்கு....
இந்த ஆண்டிலேயே லேட்-நைட் ஆர்டராக சென்னைவாசி ஒருவர் ஆர்டர் செய்துள்ளார். ஆம், பிப்ரவரி 21-ம் தேதி அதிகாலை 4.59 மணிக்கு சீஸ் ஃப்ரைஸ் (cheese fries) ஆர்டர் செய்துள்ளதுதான் லேட் நைட் ஆர்டராக இருக்கிறது.
போபால், பெங்களூரைச் சேர்ந்த இரு வாடிக்கையாளர்கள் இரு தனித்தனி சம்பவங்களில் ஸ்விக்கி டெலிவரி செய்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் டிப்ஸ் வழங்கியுள்ளார்கள்.
இவ்வாறு ஸ்விக்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT