Published : 21 Dec 2020 03:14 PM
Last Updated : 21 Dec 2020 03:14 PM

விரோத மனப்பான்மை அமைதியை ஏற்படுத்த ஒருபோதும் உதவாது: இந்தியா – ஜப்பான்  மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி

கடந்த காலங்களில், ஒத்துழைப்புகளுக்குப் பதிலாக மோதல் போக்கையே மனிதகுலம் பின்பற்றி வந்துள்ளது, விரோத மனப்பான்மை, அமைதியை ஏற்படுத்த ஒருபோதும் உதவாது என பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா – ஜப்பான் ஆறாவது கலந்துரையாடல் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்ற. இதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியா – ஜப்பான் ஆறாவது கலந்துரையாடல் மாநாட்டில் உரையாற்றுவது மிகுந்த பெருமிதம் அளிக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் சின்ஷோ அபே-யுடன் இதுபோன்ற மாநாடுகளை நாம் தொடங்கினோம்.

அப்போது முதல், புதுடெல்லியிலிருந்து டோக்கியோ, யாங்கோன் முதல் உலான் பாட்டர் வரையிலும், மாறி மாறி கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணம், அதன் அடிப்படை நோக்கங்களான, பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களை ஊக்குவித்தல், ஜனநாயகத்தைப் பற்றிய பகிர்ந்துகொள்ளப்பட்ட நற்பண்புகளை , மனிதாபிமானம், அஹிம்சை, சுதந்திரம் மற்றும் சகிப்புத்தன்மை; போன்றவற்றை தொடர்ந்து உண்மையாக முன்னெடுத்துச் செல்வதோடு, நமது பண்டைக்கால பாரம்பரிய ஆன்மீக மற்றும் அறிவாற்றல் பரிமாற்றம் போன்றவையும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

இதுபோன்ற கலந்துரையாடல்களுக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவு அளித்து வருவதற்காக, ஜப்பான் அரசுக்கு நான் நன்றிகூற விரும்புகிறேன்.

இந்த அமைப்பு, புத்தபிரானின் தலைசிறந்த சிந்தனைகள் மற்றும் கொள்கைகள் ஊக்குவிக்கப்படுவதை, குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலப்படுத்துவதை உறுதிசெய்ய சிறப்பாக பணியாற்றி வருகிறது. வரலாற்று ரீதியாக, புத்தர் ஏற்றிய ஞான ஒளி, இந்தியாவிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. எனினும், இந்த ஒளி, ஒரே இடத்தில் நின்றுவிடவில்லை. அது சென்றடையும் ஒவ்வொரு புதிய இடத்திலும், புத்தமத சிந்தனைகள், பல நூற்றாண்டுகளாக சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, புத்தமத இலக்கியங்கள் மற்றும் தத்தவங்களின் பொக்கிஷத்தை, தற்போது பல்வேறு மொழிகளில், பல்வேறு நாடுகளில் உள்ள புத்த மடாலயங்களிலும் காண முடிகிறது. இந்த எழுத்துக்களின் மையக்கருத்து, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பெரும் பொக்கிஷமாக கருதப்படுகிறது.

இதுபோன்ற பாரம்பரிய புத்தமத இலக்கியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்ட நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டுமென இன்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியாவில் அதுபோன்ற ஒரு நூலகத்தை உருவாக்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்த நூலகம், பல்வேறு நாடுகளிலும் கிடைக்கக் கூடிய புத்தபிரான் குறித்த இலக்கியங்களை டிஜிட்டல் வடிவில் சேகரிக்கும். அத்துடன், இவற்றை மொழிபெயர்ப்பு செய்து, புத்தமதத்தைச் சேர்ந்த அனைத்து மடாதிபதிகள் மற்றும் அறிஞர்களுக்கு இலவசமாகக் கிடைக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நூலகம், இலக்கியங்களின் சேகரிப்பு இடமாக மட்டும் இருக்காது. அவை, மனிதகுலம், சமுதாயம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உண்மையான விவாதங்களை மேற்கொள்வதற்கும், ஆராய்ச்சி மற்றும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான ஒரு தளமாகவும் அமையும்.

இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், புத்தரின் போதனைகள், தற்கால சவால்களை எதிர்கொள்வதில் நவீன உலகிற்கு எவ்வாறு வழிகாட்டுகிறது என்பதை விளக்குவதாக அமையும். வறுமை, இனவாதம், தீவிரவாதம், பாலின பாகுபாடு, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்கும், இந்த ஆராய்ச்சிகள் உதவிகரமாக அமையும்.

மூன்று வாரங்களுக்கு முன்பு, நான் சாரநாத் சென்றிருந்தேன். புத்தபிரான் ஞானம் பெற்றபிறகு, தமது முதல் உபதேசத்தை வழங்கிய சிறப்புக்குரிய இடம் சாரநாத் ஆகும். சாரநாத்திலிருந்து கிளம்பிய இந்த நிறை ஒளி உலகெங்கும் பரவி, கருணை, பெருந்தன்மை, மற்றும் அனைத்திற்கும் மேலாக, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் நன்மை பயக்கக்கூடிய நலன் போன்ற நற்பண்புகளை தழுவச் செய்யும். அத்துடன், உலக வரலாற்றையும், மெதுவாகவும், அமைதியாகவும் மாற்றியமைத்தது. சாரநாத்தில் தான் புதத்தபிரான், அதிருப்தி மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான தமது போதனைகளை விரிவாக விளக்கினார். வழிபாடுகள் மற்றும் மதச் சடங்குகளைவிட, இதுபோன்ற செயல்களுக்குத்தான் புத்தபிரான் முக்கியத்துவம் அளித்தார். வரலற்றுச் சரிபார்ப்புகள், ஒரு மனிதன் தனது சக மனிதனுடன் கொண்டுள்ள உறவின் மையமாக, புத்தபிரானின் போதனைகள் திகழ்கின்றன. எனவே, இது மற்றவர்களின் வாழ்வில் நேர்மறை சக்தியை ஏற்படுத்துவதற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், பேச்சுவார்த்தைகள், இதுபோன்ற நேர்மறை உணர்வுகள், ஒற்றுமை மற்றும் கருணையை, அண்டம் முழுவதும் பரவச் செய்யும். அதுவும், இத்தகைய நற்பண்புகள் நமக்குத் தேவைப்படும் தருணத்தில் கிடைக்கச் செய்யும்.

இந்த சகாப்தத்தின் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். மனிதகுல வரலாற்றின் முக்கியத் தருணத்தில், இந்தப் பேச்சுவார்த்தை நடக்கிறது. நமது இன்றைய செயல்பாடுகள், வருங்கால பேச்சுவார்த்தைகளுக்கு வடிவம் கொடுப்பதாக அமையும். இந்த தசாப்தமும், அதற்குப் பிந்தைய காலகட்டமும், ஒருங்கிணைந்த புதுமை முயற்சிகள் மற்றும் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமுதாயத்தைச் சார்ந்ததாக இருக்கும். வருங்காலத்தில் மனிதகுலத்திற்குத் தேவையான நற்பண்புகளை வெளிப்படுத்தும் அறிவாற்றல்மிக்க இளைஞர்களை வளர்ப்பதாகவும் இது அமையும்.

கற்றல் என்பது, இதுபோன்ற புதுமை முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும். மனிதகுலத்திற்கு அதிகாரமளிக்கக்கூடிய மைல் கல்லாக இந்த புதுமை முயற்சிகள் அமையவேண்டும்.

வெளிப்படையான, ஜனநாயக ரீதியான, திறந்த மனதுடன் கூடிய சமுதாயம் தான், புதுமை முயற்சிகளை மேற்கொள்ள உகந்ததாக இருக்கும். எனவே, இதற்குமுன் இல்லாதவகையில், வளர்ச்சியில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம். உலக அளவிலான வளர்ச்சி என்பது, ஒரு சிலருக்கு இடையே மட்டும் நிகழ்ந்துவிடக்கூடியது அல்ல. க்ஷ

இந்த அட்டவணை மிக நீண்டது. அதன் குறிக்கோள் மிக பரந்தது. வளர்ச்சிக்கான நடைமுறைகள், மனிதகுலம் சார்ந்த அணுகுமுறையைக் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன், நமது சுற்றுப்புற நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

விரோத மனப்பான்மை, அமைதியை ஏற்படுத்த ஒருபோதும் உதவாது. கடந்த காலங்களில், ஒத்துழைப்புகளுக்குப் பதிலாக மோதல் போக்கையே மனிதகுலம் பின்பற்றி வந்துள்ளது. ஏகாதிபத்திய அணுகுமுறை முதல் உலகப் போர்கள் வரையிலும், ஆயுதப் போட்டி முதல் விண்வெளிப் போட்டிகள் வரையிலும், நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டபோதிலும், அவை, ஒருவரையொருவர் படுகுழியில் தள்ளுவதாகவே அமைந்தன.

ஆனால், தற்போது நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம். புத்தபிரானின் போதனைகள், பகைமையைக் கைவிட்டு, அதிகாரமளிப்பதற்கான வலிமையை ஏற்படுத்துவதாக பேச்சுவார்த்தைகளை மாற்றுகின்றன. அவரது போதனைகள் பரந்த மனம் உடையவை. கடந்த கால அனுபவங்களிலிருந்து உணர்ந்து கொள்வதுடன், வளமான எதிர்காலத்திற்கு பாடுபட வேண்டும் என்பதையே அவை கூறுகின்றன. நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த சேவை இதுவாகத்தான் இருக்க முடியும்.

ஒற்றுமைதான் தொடர்ந்து பேச்சுவார்த்தையின் சாராம்சமாக உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள், நம்மிடமுள்ள சிறந்த பண்புகளை ஒருங்கிணைத்து வெளிக்கொணரட்டும். நமது பண்டைக்கால நற்பண்புகளைப் போற்றி, வருங்காலத்திற்கானவற்றை உருவாக்க இதுவே சரியான தருணம். மனிதநேயத்தைத் தான் நமது கொள்கைகளின் சாராம்சமாகக் கொண்டிருக்கிறோம். நல்லிணக்கத்துடன், இயற்கையோடு இணைந்து வாழ்வதையே, நமது வாழ்வின் அச்சாணியாகக் கருத வேண்டும். நம்மிடையேயான பேச்சுவார்த்தைகள், சக மனிதர்கள், மற்றும் இயற்கை, நாம் செல்லும் பாதைக்கு ஒளி ஏற்படுத்துவதாக அமைவது அவசியம். மிக முக்கியமான இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த, ஏற்பாட்டாளர்களை பாராட்டுவதோடு, பேச்சுவார்த்தைகள் வெற்றியடையவும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x