Published : 21 Dec 2020 02:43 PM
Last Updated : 21 Dec 2020 02:43 PM
இங்கிலாந்தில் புதுவகை கரோனா வைரஸ் பரவிவருவதால் அந்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களைஉடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்திலிருந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கரோனா வைரஸின் புதிய திரிபு வைரஸ் பரவிவருவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவிட் -19 இன் புதிய திரிபு வைரஸ் பரவுதை தடுக்க அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
லண்டன் உட்பட இங்கிலாந்தின் சில பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகளை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சனிக்கிழமை அறிவித்தார்.
கோவிட் -19 இன் புதுவகை திரிபு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதுவகை கரோனா திரிபு வைரஸ் குறித்து விவாதிக்க இன்று சுகாதாரத்துறை அமைச்சகம் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவிந்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் திரிபு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து அனைத்து விமானங்களையும் உடனடியாக தடை செய்யுமாறு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது தொடர்ச்சியான ட்வீட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:
இங்கிலாந்திலிருந்து பரவிவரும் கரோனாவின் புதுவகை வைரஸ் மிகுந்த கவலையைத் தருகிறது. அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், அதைக் கட்டுப்படுத்த ஒரு தற்செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
மேலும் இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து அனைத்து விமானங்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். இதில் தாமதம் கூடாது. கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, சர்வதேச விமானங்களைத் தடை செய்வதில் நாம் மிகவும் தாமதம் செய்துவிட்டோம், இது கரோனா பாதிப்புகளில் கடுமையான அதிகரிப்புக்கு வழிவகுத்தது
வைரஸின் புதிய திரிபு ஏதேனும் ஏற்பட்டால் நமது மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு இதற்கான ஆயத்த திட்டம், அத்துடன் கரோனா திரிபு வைரஸ் பாதிக்கப்பட்ட நாடு அல்லது நாடுகளிலிருந்து நம் நாட்டுக்குள் வரும் எந்தவொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இரண்டுமே தேவை.
வைரஸின் புதிய தாக்கம் ஏதேனும் ஏற்பட்டால், நமது மருத்துவ நிபுணர்கள் ஒரு சிகிச்சை திட்டத்துடன் தயாராக இருக்க வேண்டும். சுகாதார நெறிமுறைகள் இன்னும் கடுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
.இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT