Published : 21 Dec 2020 02:28 PM
Last Updated : 21 Dec 2020 02:28 PM
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை வெல்ல பாஜக தடுமாறும். இது நடக்காவிட்டால், ட்விட்டரிலிருந்து விலகுகிறேன் எனத் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி இப்போதிருந்தே நிலவி வருகிறது. 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க மம்தா போராடி வருகிறார், ஆனால், ஆட்சியைப் பிடிக்க பாஜக பல்வேறு காய்களைத் திட்டமிட்டு நகர்த்தி வருகிறது.
இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.
இதில் கடந்த இரு நாட்களுக்கு முன் மேற்கு வங்கத்துக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அதிகாரி உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “குறிப்பிட்ட சில ஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரத்தால் பாஜக வலுவாகக் காண்பிக்கப்படுகிறது. உண்மையில், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப் போகிறது.
என்னுடைய ட்விட்டர் பதிவைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரில் இருந்தே விலகிவிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
பிரசாந்த கிஷோருக்குப் பதில் அளித்து பாஜக தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மேற்கு வங்கத்தில் பாஜக சுனாமி வீசப்போகிறது. மாநிலத்தில் புதிய அரசு அமைந்தவுடன், இந்த தேசம் தேர்தல் வியூக வல்லுநரை இழக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT