Last Updated : 21 Dec, 2020 02:11 PM

4  

Published : 21 Dec 2020 02:11 PM
Last Updated : 21 Dec 2020 02:11 PM

அயோத்தி ராமர் கோயிலுக்கு மக்களிடம் நிதி திரட்டுகிறோம் எனக் கூறி 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ய திட்டம்: சிவசேனா குற்றச்சாட்டு - பாஜக பதிலடி

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே : கோப்புப் படம்.

மும்பை

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு மக்களிடம் நிதி திரட்டுகிறோம் என்று கூறி, மிகப்பெரிய அளவில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரமாக்க முயல்கிறார்கள் என்று சிவசேனா கட்சி பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், சிவசேனாவின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. ராமர் கோயில் விவகாரத்தை எப்போதும் அரசியலாக்கியது இல்லை. ஆனால், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதைத் தடுத்தது சிவசேனாதான் என்று பாஜக பதில் அளித்துள்ளது.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கடந்த வாரம் அளித்த பேட்டியில், “நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மக்களைச் சந்தித்து, கோயிலுக்கான பங்களிப்பு செய்யக்கோரி பிரச்சாரம் செய்யப்படும். சமானிய மக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கோயில் கட்டப்படும். வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற அரசு அனுமதி கிடைக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இன்று வெளியான தலையங்கத்தில் இந்த விவகாரம் குறித்து எந்தக் குறிப்பிட்ட கட்சியின் பெயரையும் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''அயோத்தி ராமர் கோயில் என்பது, ஒரு அரசியல் கட்சியின் லாபத்துக்காகக் கட்டப்படவில்லை. ஆனால், நாட்டில் உள்ள இந்து மக்களின் பெருமையை உணர்த்தும் வகையில் கட்டப்பட வேண்டும்.

பொதுமக்களிடம் நன்கொடை பெற்று ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்ட வேண்டும் என ஒருபோதும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், கடவுள் ராமர் பெயரில் மிகப்பெரிய நிதி திரட்ட செய்யப்படும் மிகப்பெரிய அளவிலான அரசியல் ரீதியான பிரச்சாரம் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

மக்களிடம் பணம் பெறுதல் என்பது சாதாரணமானது அல்ல. அதில் அரசியல் இருக்கிறது. இதுபோன்று அரசியலுக்காகச் செய்யப்படும் பிரச்சாரம் நடக்கக் கூடாது.

கோயிலுக்கான பிரச்சாரத்தின்போது, நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் தங்களின் ரத்தம் உள்ளிட்ட பலவற்றைத் தியாகம் செய்துள்ளார்கள். ஆனால் நிதி திரட்டுதல் மூலம்தான் கோயில் கட்டப்பட வேண்டுமா? அவ்வாறு கட்டுவது இந்தக் கோயிலுக்காக ரத்தம் சிந்திய ஒவ்வொரு கரசேவகர்களின் ஆத்மாவை அவமானப்படுத்துவதாகும்.

ராமர் கோயிலுக்காக நன்கொடை பெறுகிறோம் என்ற பெயரில் தன்னார்வலர்கள் நாடு முழுவதும் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். இதற்காக 4 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடப் போகிறார்கள்.

கோயிலுக்கான போராட்டம் அரசியல் ரீதியானது அல்ல. இந்துக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு. விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், வினய் கத்தியார் உள்ளிட்ட பல தலைவர்கள் கோயிலுக்கான பிரச்சாரத்தின் போது, அயோத்தியில் முகாம் அமைத்துத் தங்கி உழைத்தார்கள்.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ரத யாத்திரையை நாடு முழுவதும் நடத்தினார். சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவின் உத்வேகத்தால் கரசேவகர்கள் செயல்பட்டார்கள். இது வரலாறு. ஆனால், இன்று ராமர் கோயிலைச் சிலர் சொந்தம் கொண்டாடும் உரிமைப் பிரச்சினையாக மாறுகிறது''.

இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.

ஆனால், இதற்கு மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ ஆஷிஸ் ஷெல்லர் பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “எதற்காக சிவசேனா அச்சப்படுகிறது? 2024-ம் ஆண்டு தேர்தலில் தோற்றுவிடுவோம் என எதற்காக சஞ்சய் ராவத் இப்போதே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்?

பாஜகவைப் பொறுத்தவரை ராமர் கோயில் கட்டுவது அரசியல் பிரச்சினையாக இருந்ததும் இல்லை, அரசியல் பிரச்சினையாக்கவும் இல்லை.

சிவசேனா கட்சியினர் ராமருக்கு விரோதிகள். ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்தும்போது அது நடக்கவிடாமல் இடையூறு செய்தது சிவசேனா கட்சிதான். இப்போது சாமானிய மக்கள் ராமர் கோயிலுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்யும்போது, அதை வழங்கவிடாமல் சிவசேனா தடுக்கிறது.

ராமர் கோயிலுக்கான பிரச்சாரத்தின்போது, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஹெச்பி கட்சிகள், அசோக் சிங்கால், உமா பாரதி போன்ற பல தலைவர்கள் தடைகளைச் சந்தித்துள்ளார்கள். தியாகங்களைச் செய்துள்ளார்கள்” என்று ஆஷிஸ் ஷெல்லர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x