Last Updated : 21 Dec, 2020 11:37 AM

7  

Published : 21 Dec 2020 11:37 AM
Last Updated : 21 Dec 2020 11:37 AM

ராமர் கோயில் கட்டியபின் காசி, மதுராவின் மசூதி நிலங்களும் மீட்கப்படுவதை எவரும் தடுக்க முடியாது: விஎச்பி சாதுக்கள் சபை கூட்டத்தில் அறிவிப்பு

விஷ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) சார்பில் அகில இந்திய சாதுக்கள் சபை கூட்டம், நேற்று வாரணாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராமர் கோயில் கட்டி முடித்தபின் காசி, மதுராவின் மசூதி நிலங்களும் மீட்கப்படுவதை எவரும் தடுக்க முடியாது என சாதுக்கள் சபையின் தலைவர் மஹந்த் நரேந்தர கிரி அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த நிலப் பிரச்சினை கடந்த வருடம் உச்ச நீதிமன்றத்தால் முடிவிற்கு வந்தது. இதன் மேல்முறையீட்டுத் தீர்ப்பில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் நிலம் ராமர் கோயில் கட்ட ஒப்படைக்கப்பட்டது.

இதேபோன்ற பிரச்சினையாக, காசி விஸ்வநாதர் மற்றும் மதுரா கிருஷ்ணர் கோயில்களை இடித்து மசூதிகள் கட்டப்பட்டதாக நிலவுகிறது. ராமர் கோயில் தீர்ப்பை அடுத்து காசி, மதுராவின் பிரச்சினைகளும் சாதுக்களால் எழுப்பப்பட்டு வருகிறது.

இதன் மீது விவாதிக்க நேற்று அலகாபாத்தில் விஎச்பியின் சார்பில் இந்திய அளவிலான முக்கிய சாதுக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய அஹாடா பரிஷத்தின் தலைவர் நரேந்தரகிரி, ராமர் கோயில் தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினரான ஜகத்குரு வாசுதேவானந்த் சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் முடிவில் அகில இந்திய அஹடா பரிஷத்தின் தலைவரான மஹந்த் நரேந்தரகிரி கூறும்போது, ”காசியின் விஸ்வநாதர், மதுராவில் கிருஷ்ணர் கோயில்களின் நிலம் அங்கு மசூதிகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ராமர் கோயில் கட்டி முடித்தபின் மசூதிகளின் நிலங்களை மீட்பதை எவராலும் தடுக்க முடியாது. இது சாதுக்களின் முக்கியப் பொறுப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதில் கலந்துகொண்ட ஜகத்குரு சரஸ்வதி வாசுதேவானந்த் கூறும்போது, ”ராமர் கோயில் கட்டும் பணி முதலில் நடைபெறுகிறது. இதைக் கட்டி முடித்தபின் காசி மற்றும் மதுராவின் மசூதி நிலங்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

அயோத்தியின் ராமர் கோயில் கட்டுவதற்கான போராட்டத்தை முதன்முதலில் விஎச்பி தொடங்கியது. கடந்த 1983ஆம் ஆண்டு உ.பி.யின் முசாபர்நகரில் அது நடத்திய சாதுக்கள் சபையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x