Published : 21 Dec 2020 03:14 AM
Last Updated : 21 Dec 2020 03:14 AM

மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றம்: கட்சித் தலைவர் சோனியா நடவடிக்கை

புதுடெல்லி: கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இதையடுத்து கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். சோனியா இடைக்காலத் தலைவரானார். பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தொடர் தோல்வி ஏற்பட்டதால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில் அதிருப்தி தலைவர்கள் உட்பட மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் பலவீனமாக உள்ள மாநிலங்களில் கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்து கட்சியை பலப்படுத்த சோனியா காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார். தெலங்கானா, குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவும் சோனியா முடிவு செய்துள்ளார். சமீபத்திய தேர்தல் தோல்விகளுக்கு பொறுப்பேற்று தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மும்பை மண்டல காங்கிரஸ் கமிட்டியிலும் சோனியா காந்தி மாற்றங்களை செய்துள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள அசாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் 3 பேரை சோனியா நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட செயலாளர்கள் அசாம், கேரளா மாநிலங்களின் பொறுப்பாளர்களான மூத்த தலைவர்கள் ஜிதேந்திர சிங், தாரிக் அன்வர் ஆகியோருக்கு உதவியாக செயல்படுவார்கள் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x