Published : 31 Oct 2015 07:49 AM
Last Updated : 31 Oct 2015 07:49 AM
கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைத்ததை போன்று, ஆந்திர மாநிலம் முழுவதும் வறட்சியை அறவே போக்க கிருஷ்ணா-பென்னா நதிகள் இணைப்பு திட்டத்தையும் விரைவில் நிறைவேற்றுவேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
நெல்லூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், கண்டலேறு அணைக்கட்டு பகுதி நீர்ப்பாசன திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண் டார். பின்னர் அவர் பொதலகூரு பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் பேசி யதாவது:
மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் குறிப்பிட்ட காலங்களில் பருவமழைகூட பெய்வதில்லை. இதற்கு காரணம் இயற்கை வளங்களை நாம் அழித்து வருவதுதான். இதுகுறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
மாநிலத்தில் உள்ள அனைத்து அணைக்கட்டுகளிலும் குறைந்த பட்சம் 500 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. தண்ணீர் அனைவருக்கும் அவசியம். இதனை வலியுறுத்தவே நீர்-மரம் திட்டத்தை அரசு அமல் படுத்திவருகிறது. இந்த ஆண்டு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் உபயோகப்படுத்த முடியாமல் கடலில் கலந்துவிட்டது. இதை தடுக்க கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக நாம் அறிமுகப்படுத்தினோம். இது ஒரு சரித்திர நிகழ்வாகும். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்கி உள்ளோம்.
இதனை தொடர்ந்து, கிருஷ்ணா நதியை பென்னா நதியுடன் இணைப்பதும் அவசியம். இத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, ஆந்திர மாநிலம் முழுவதும் முற்றிலுமாக வறட்சியை ஒழித்துவிடலாம். விவசாயம் செழிக்கும்.
இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
நெல்லூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT