Published : 20 Dec 2020 03:38 PM
Last Updated : 20 Dec 2020 03:38 PM
தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் கூடுதலாக ரூ.16 ஆயிரத்து 728 கோடி கடன் பெற்றுக்கொள்ள மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த 5 மாநிலங்களும், எளிதாகத் தொழில் தொடங்குவதற்கான சீரமைப்பு விதிகளைத் தங்கள் மாநிலங்களில் முழுமையாகச் செயல்படுத்தியதையடுத்து இந்த அனுமதி தரப்பட்டுள்ளது.
கூடுதலாகக் கடன்பெற விருப்பம் இருக்கும் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் எளிதாகத் தொழில் செய்வதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த மே மாதம் அறிவித்திருந்தது.
இந்த 5 மாநிலங்களும் மாவட்ட அளவிலான வர்த்தகச் சீரமைப்பு திட்டத்தைச் செயல்படுத்தியது உறுதி செய்யப்பட்டதையடுத்து கூடுதல் கடன்பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது தொழில், வர்த்தகம் தொடங்குவதற்கான பதிவுச் சான்று பெறுதல், சான்றுகளைப் புதுப்பித்தல், அங்கீகாரம் வழங்குதல், ஒப்புதல் அளித்தல் போன்றவற்றுக்கான தேவைகளை நீக்குதல் இந்தச் சீரமைப்பின் ஒரு பகுதியாகும்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “எளிதாக வர்த்தகம் செய்வதற்கான சீரமைப்பு விதிகளை முழுமையாக 5 மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளன. இந்த 5 மாநில அரசுகளும் கூடுதலாக வெளிச்சந்தையில் ரூ.16,728 கோடி கடன் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பையடுத்து, மாநில அரசுகள் கூடுதல் நிதித் தேவையை நிறைவு செய்யக் கடந்த மே மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி மாநில அரசுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மையில் 3 சதவீதம் கடன் பெற அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு மாநில அரசுகள், ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு, எளிதாக வர்த்தகம் செய்யும் சீரமைப்பு விதிகள், நகர உள்ளாட்சி சீர்திருத்தம், மின்துறை சீர்திருத்தத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதுவரை 10 மாநிலங்கள் ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு திட்டத்தையும், 5 மாநிலங்கள் எளிதாகத் தொழில் செய்யும் சீரமைப்பு விதிகளையும், 2 மாநில அரசுகள், உள்ளாட்சி சீர்திருத்தங்களையும் செய்து முடித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT