Published : 20 Dec 2020 12:54 PM
Last Updated : 20 Dec 2020 12:54 PM
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள், விவாதங்களைத் தவிர்க்கவே நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு மீது சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 25-வது நாளை எட்டியுள்ளது. இன்னும் விவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு காணப்படவில்லை. அதுவரை விவசாயிகள், மத்திய அரசு இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டவில்லை.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் அந்தக் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டம் குறித்துக் கேள்விகள், விவாதங்கள் எழும் என்பதாலேயே மத்திய அரசு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த விருப்பமில்லாமல் ரத்து செய்துள்ளது.
கடந்த 10-ம் தேதி பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி இந்திய ஜனநாயக வரலாற்றில் மைல்கல் என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ரூ.1000 கோடி செலவிட வேண்டிய அவசியம என்ன இருக்கிறது?
தற்போது இருக்கும் நாடாளுமன்றமே இன்னும் 50 முதல் 75 ஆண்டுகள்வரை தாங்கக்கூடிய நிலையில் வலுவாக இருக்கிறது. நம்முடைய முன்னோர்கள், தலைவர்கள் நினைவுகளை அழிக்க யாரும் நினைக்கவில்லை. ஆனால், புதிய நாடாளுமன்றம் கட்டி தன்னுடைய தோற்றத்தைப் பெருமைப்படுத்திக் கொள்வது மிகை ஜனநாயகமாக இருக்கிறது.
நாடாளுமன்றம் என்பது உயர்ந்தது. இதில் நீதிமன்றம் நாடாளுமன்றத்தில் தலையிட அதிகாரமில்லை. ஆனால், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி விவகாரத்தில் மகாராஷ்டிர சட்டப்பேரவை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாக சட்டப்பேரவை விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது அரசியல் போட்டியாளர்களை வீழ்த்த தனது முழு பலத்தோடு உழைத்தார். ஆனாலும், தோல்வி அடைந்த தனது அரசியல் எதிரிகளை எப்போதும் கண்ணியத்துடன் நடத்தினார். மோடியும், அவர்களின் சகாக்களும், சர்ச்சிலை உதாரணமாக மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்''.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT