Published : 20 Dec 2020 08:54 AM
Last Updated : 20 Dec 2020 08:54 AM
அமித் ஷாவுக்கு மேற்கு வங்க அரசியல் வரலாறு முழுவதும் தெரியவில்லை. திரிணமூல் காங்கிரஸில் வந்து சேர்ந்தவர் அல்ல மம்தா பானர்ஜி. அந்தக் கட்சியைத் தொடங்கியவரே மம்தா பானர்ஜிதான் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகிய செல்வாக்கு மிக்க தலைவரான சுவேந்து அதிகாரி உள்பட 7 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி. ஆகியோர் நேற்று அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
அப்போது நடந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில், “பல்வேறு கட்சியினரைக் கட்சி மாறவைத்து இணைக்கிறது பாஜக என்று மம்தா குற்றம் சாட்டுகிறார். நான் அவரிடம் கேட்கிறேன். நீங்கள் தலைவராக இருக்கும் திரிணமூல் காங்கிரஸ் அவரின் சொந்தக் கட்சியா? அவர் காங்கிஸில் இருந்தவர்தானே. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மம்தா வரவில்லையா? மம்தா மட்டும் கட்சி மாறும்போது, அதேபோல சுவேந்து அதிகாரியும் அதேபோன்று மாறியுள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது?” எனத் தெரிவித்தார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான கல்யாண் பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
கல்யாண் பானர்ஜி அளித்த பேட்டியில் கூறியதாவது:
''மேற்கு வங்க அரசியல் வரலாறு முழுவதுமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குத் தெரியாது. அவர் புரிந்து கொள்ளவும் இல்லை. அமித் ஷா மக்களைத் தவறாக வழிநடத்துகிறார். காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்த மம்தா பானர்ஜி சுயமாகக் கட்சி தொடங்கினார். அந்தக் கட்சிதான் திரிணமூல் காங்கிரஸ்.
அமித் ஷாவுக்கு எதுவுமே தெரியவில்லை. மம்தா பானர்ஜி காங்கிரஸிலிருந்து பிரிந்தபின் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அவர் தொடங்கியதுதான் திரிணமூல் காங்கிரஸ். எதற்காகத் தனி மனிதர் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள், அவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்.
மம்தா பானர்ஜி முதல்வராக வர வேண்டும் என்ற பேராசை பிடித்தவர் அல்ல. மக்கள் வாக்களித்து அவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். விவசாயி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டவுடன் நீங்கள் விவசாயிகளின் நண்பராகவிட முடியாது. விவசாயிகளுக்காக உண்மையாக உழைப்பவர்கள்தான் நண்பராக இருக்க முடியும்.
மம்தா பானர்ஜி 3-வது முறையாக ஆட்சிக்கு வருவார். மக்கள் மம்தா மீது உள்ளார்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மற்றவர்களின் குடும்பத்தை மையமாகக் கொண்ட அரசியல் பற்றி அமித் ஷா பேசுகிறார்.
நான் உங்களுக்கு (அமித் ஷா) நினைவூட்டுகிறேன். சுவேந்து அதிகாரி ஒரு செல்வாக்குமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லவா? உங்கள் மகனும் யாருடைய செல்வாக்கில் பி.சி.சி.ஐ.யின் உயர் அதிகாரியானார்?''
இவ்வாறு கல்யாண் பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT