Last Updated : 20 Dec, 2020 08:52 AM

3  

Published : 20 Dec 2020 08:52 AM
Last Updated : 20 Dec 2020 08:52 AM

மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகள் பிரியும் வாய்ப்பு அதிகரிப்பு: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட நிதிஷ் கட்சி திட்டம்

புதுடெல்லி

மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மம்தா ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் வகையில் ஹைதராபாத் எம்.பி.யான அசாதுதீன் ஒவைஸியும் போட்டியிடுகிறார். மேற்கு வங்கத்தில் மொத்த முள்ள 295-ல் 98 தொகுதிகளின் வெற்றி அங்குள்ள 27 சதவீத முஸ்லிம்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே, ஒவைஸியால், பிஹாரைப் போல் முஸ்லிம் வாக்குகள் பிரியும் நிலை உருவாகி வருகிறது. இந்த முறை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினரான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மேற்கு வங்கத்தில் குறைந்தது 75 இடங்களில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த இறுதி முடிவு அக்கட்சியின் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் வரும் 27-ல் கூடும் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஜேடியுவின் தேசிய செய்தித் தொடர்பாளரான கே.சி.தியாகி கூறும்போது, "மேற்கு வங்கத்தில் நாங்கள் போட்டியிடுவது உறுதி, என்றாலும், இதன் மீது எங்கள் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இறுதி முடிவு எடுப்பார். தற்போதைக்கு எங்கு, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என ஆராய்ந்து வருகிறோம்" என்றார். ஜேடியு தலைமையிலான என்டிஏ சமீபத்தில் முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. அங்கு என்டிஏவில் இருந்து விலகிய சிராக் பாஸ்வான் கட்சி தனித்து போட்டியிட்டதால், ஜேடியுவுக்கு பாஜகவைவிட குறைவான தொகுதிகளே கிடைத்தன.

நிதிஷ் குமார் முதல்வரானாலும், பாஜகவைச் சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாக பதவி ஏற்றனர். இதனால், நிலையில்லாத தனது பதவியை தக்கவைக்க பாஜகவுக்கு சாதகமாக செயல்பட வேண்டிய நிலைக்கு நிதிஷ் தள்ளப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஜேடியு தனித்து போட்டியிட்டால் பாஜகவுக்கு எதிரான வாக்குகளே அதிகமாகப் பிரியும் வாய்ப்புகள் உள்ளன. இதுபோல பிஹாருக்கு வெளியே டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டில் ஜேடியு தனித்து போட்டியிட்டது.

இதில், தொகுதிகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் பாஜகவுக்கு எதிரான கணிசமான வாக்குகளை பிரித்திருந்தது. எனவே, மேற்கு வங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பிரியும் வாக்குகளால் பலன் பெறும் வாய்ப்பு பாஜகவுக்கு அதிகரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x