Published : 19 Dec 2020 04:08 PM
Last Updated : 19 Dec 2020 04:08 PM

திரிணமூல் காங்கிரஸில் இனி மம்தா மட்டும் தான் இருப்பார்: அமித் ஷா ஆவேசம்

கொல்கத்தா

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி மட்டும் தான் இருப்பார், மற்ற அனைவரும் அக்கட்சியில் இருந்து விலகி விடுவார்கள் என பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார்.

பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று மேற்குவங்கம் வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

கொல்கத்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்குச் இன்று சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நவீனத்துவத்திற்கும், ஆன்மீகத்திற்கும் விவேகானந்தர் முன் மாதிரி எனக் கூறினார்.

இன்று மிட்னாப்பூர் செல்லும் அமித் ஷா, புரட்சியாளர் குதிராம் போஸுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இரு கோயில்களில் தரிசனம் செய்தார். இந்தப் பயணத்துக்கு இடையே விவசாயி ஒருவரின் இல்லத்தில் அமித் ஷா மதிய உணவு சாப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து மிட்னாப்பூரில் பிரமாண்ட பேரணி பாஜக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி. ஒருவர் ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த விலகிய மூத்த தலைவரும், கேபினட் அமைச்சராக இருந்தவருமான சுவேந்து அதிகாரி,
இது தவிர திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சில்பேந்திர தத்தா, தபாசி மண்டல், அசோக் திண்டா, சுதீப் முகர்ஜி, சாய்காந்த் பாஞ்சா, திபாளி பிஸ்வாஸ், சுக்ரா முண்டா, சியாம்டா முகர்ஜி, பிஸ்வாஜித் குண்டா, பன்சாரி மெயிட்டி ஆகிய 11 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்தனர்.

இவர்களை தவிர தற்போதைய எம்.பி, முன்னாள் எம்.பி. உட்பட பல முக்கியத் தலைவர்களும் பாஜகவில் அமித் ஷா முன்னிலையில் இணைந்தனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

மம்தா பானர்ஜியின் மோசமான காட்டாட்சியை மக்கள் வெறுக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு முற்றிலம் சீரழிந்து விட்டது. எதிர்க்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது. மம்தா பானர்ஜி குடும்ப அரசியல் நடத்தி வருகிறார்.

இதனால் மக்கள் மட்டுமின்றி திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளும் வெறுத்து போயுள்ளனர். பாஜகவில் இன்று இணைந்தவர்களை மனதார வாழ்த்து வரவேற்கிறேன்.

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி மட்டும் தான் இருப்பார், மற்ற அனைவரும் அக்கட்சியில் இருந்து விலகி விடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x