Published : 19 Dec 2020 03:56 PM
Last Updated : 19 Dec 2020 03:56 PM
பிராந்திய அரசியலில் இருந்து வெளியே வாருங்கள் என்று மேற்கு வங்க அரசியல்வாதிகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று மேற்குவங்கம் வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
அமித் ஷா தனது இரண்டு நாள் மாநில பயணத்திற்காக சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் கொல்கத்தாவை வந்து சேர்ந்தார். கொல்கத்தா விமான நிலையத்தில் கைலாஷ் விஜயவர்ஜியா, திலீப் கோஷ் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் அவரை வரவேற்றனர்.
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட பின்னடைவில் ஆளும் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் கட்சி மற்றும் மாநில சட்டப்பேரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ள நேரத்தில் அவரது பயணம் அமைந்துள்ளது.
உள்துறை அமைச்சர் இன்று காலைஅமித்ஷா கொல்கத்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லம் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின், கொல்கத்தாவிலிருந்து மிட்னாபூருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு இந்திய விடுதலை புரட்சியாளர் குதிராமின் மூதாதையர் வீட்டிற்கு வருகை தந்தார். அவருக்கு புரட்சியாளரின் குடும்ப உறுப்பினர்களை சால்வைகள் அணிவித்து மற்றும் நினைவுச் சின்னங்களை அளித்து வரவேற்றனர்.
பின்னர் மிட்னாப்பூரில் அமித் ஷா, குதிராம் போஸுக்கு அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் குதிராம் போஸின் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.
பின்னர் அருகிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமையான சித்தேஸ்வரி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். குதிராம் போஸ் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது:
1908 ஆம் ஆண்டில் புரட்சியாளர் குதிராம் போஸ் தனது 18 வயதில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். குதிராம் உயிர்த்தியாகம் செய்தபோது வந்தேமாதம் என்று முழங்கியது நாட்டின் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்தது.
வங்காளத்தில் குறுகிய அரசியலை மேற்கொள்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், குதிராம் போஸ் வங்காளத்தைச் சேர்ந்தவர் போலவே இந்தியாவின் பெருமையும் தான்.
நாட்டிற்காக தனது உயிரைக் கொடுத்த சுதந்திர போராட்ட வீரர் பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், வங்காளத்தைச் சேர்ந்தவர் போலவே உத்தரபிரதேச மகனும் ஆவார்.
சுதந்திரத்திற்காக பெரும் தியாகங்களைச் செய்த நாட்டின் துணிச்சலான தலைவர்கள் பிராந்தியவாதத்தின் இத்தகைய குறுகிய அரசியலை ஒருபோதும் கற்பனை செய்திருக்க முடியாது.
மேற்குவங்கத்தில் பிராந்தியவாத அரசியலில் ஈடுபடுபவர்கள் அதை வென்று தேசிய அரசியலில இணைய வேண்டும்.
சுதந்திர போராட்டத்தில் வங்காளம் மற்றும் அதன் துணிச்சலான மனிதர்களின் பங்களிப்பை தேசம் ஒருபோதும் மறக்க முடியாது. குதிராம் போஸ் செய்த மிக உயர்ந்த தியாகத்தால் தேசத்தின் நலனுக்காக உழைக்க எதிர்கால தலைமுறையினர் தூண்டப்படுவார்கள்.
நாட்டிற்காக எங்கள் உயிரைக் கொடுக்கும் சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும், தேசத்துக்காக வாழ்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது என்பதை நான் இளைஞர்களிடம் சொல்ல விரும்புகிறேன். பிரதமரின் நரேந்திர மோடி தலைமையில் வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT