Published : 13 Oct 2015 12:04 PM
Last Updated : 13 Oct 2015 12:04 PM
இந்தியாவில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாக எழுத்தாளர் சல்மன் ருஷ்டி கருத்து தெரிவித்துள்ளார்.
சகிப்புத் தன்மை குறைந்து வருவதை எதிர்க்கும் விதத்தில் தொடர்ந்து எழுத்தாளர்கள் பலர் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்து வரும் சூழலை விவரித்து, "கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது" என்று புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, "சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்த நயன்தாரா சேகல் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாத்ரிச் சம்பவத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து, நேருவின் உறவினரும், 1986 சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான நயன்தாரா சேகல் தனது சாகித்ய அகாடமி விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ், காஷ்மீர் கவிஞரும், எழுத்தாளருமான குலாம் நபி கயால், இந்தி எழுத்தாளர்கள் மங்களேஷ் தர்பல், ராஜேஷ் ஜோஷி, பஞ்சாபி எழுத்தாளர் வர்யம் சந்து, ஜி.என் ரங்கநாத ராவ், அனில் ஜோஷி, டெல்லி நாடக கலைஞர் மாயா கிருஷ்ணா ராவ் என சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளிக்கும் எழுத்தாளர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.
தொடர்ந்து சுர்ஜித் பட்டர், பால்தேவ் சிங் சதாக்னாமா, ஜஸ்விந்தர் மற்றும் தர்ஷன் பட்டர் உள்ளிட்ட பஞ்சாபி எழுத்தாளர்களும் தங்களது சாகித்ய ஆகாடமி விருதுகளை திருப்பி அளிக்க முன்வந்துள்ளனர்.
மூத்த எழுத்தாளரும், முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம்.கல்புர்கி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் பல்வேறு எழுத்தாளர்கள் தங்களின் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்துள்ளனர்.
சாகித்ய அகாடமி வரலாற்றில் விருதுகளை இதுவரை யாரும் திரும்ப ஒப்படைத்தது கிடையாது. சில காரணங்களுக்காக விருதுகளை பெற மறுத்த சம்பவங்கள் மட்டும் உண்டு. இதை திரும்ப பெறுவதா? வேண்டாமா? என்பதை எங்கள் நிர்வாகக் குழு தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு எடுக்க வரும் 23-ம் தேதி டெல்லியில் நிர்வாகக் குழு கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT