Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

பென்னா நதியில் மூழ்கி இறந்த 6 இளைஞர்களின் உடல்கள் மீட்பு

பென்னா நதியில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம்.

கடப்பா

திருப்பதி கொர்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரய்யா (60). ஓய்வு பெற்ற அரசு பஸ் ஓட்டுநரான இவர், கடந்த ஆண்டு உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். இவரது உடல் அவரது சொந்த ஊரான கடப்பா மாவட்டம், சித்தபடம் எனும் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது குடும்பத்தினர் திருப்பதியிலேயே இன்னமும் வசிக்கின்றனர். ராமசந்திரய்யாவின் முதலாண்டு நினைவு தினம்நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

இதற்காக திருப்பதியில் இருந்து அவரது மகன் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 8 பேர் காரில் சித்தபடம் சென்றனர். அங்கு நினைவு தின நிகழ்ச்சிகள் முடிந்ததும் அனைவரும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மீண்டும் காரில் திருப்பதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, வழியில் உள்ள பென்னா நதியில் அனைவரும் குளித்தனர். சிவக்குமார் மட்டும் நீச்சல் தெரியாத காரணத்தால், நதிக்கரை ஓரத்தில் குளித்து விட்டு கரைக்குவந்து விட்டார். அப்போது, மற்றவர்கள் சற்று ஆழமான இடத்தில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனைக் கண்ட சிவக்குமார் உடனடியாக ஓடி சென்று அக்கம் பக்கத்தாருக்கும், ரயில்வே கோடூரு போலீஸாருக்கும் தகவல்கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் மற்றும் உள்ளூர்வாசிகள் விரைந்து சென்று நீரில் அடித்து சென்றவர்களை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால், முதல் நாள் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள ஒருவரை தேடும் பணி தொடர்கிறது. இதுகுறித்து ரயில்வே கோடூரு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x