Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

கரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயமில்லை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது மத்திய சுகாதாரத் துறை

கரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் கேள்வி, பதில் வடிவில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இந்தியாவில் கரோனா தடுப்பூசி பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளது. கரோனா தடுப்பூசியை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. முதல் கட்டமாகசுகாதாரத் துறை ஊழியர்கள், கரோனா முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு கீழான நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமில்லை. அவரவர் விருப்பத்தின்பேரில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். எனினும் வைரஸில் இருந்து நம்மையும், உறவினர்கள், நண்பர்களையும் தற்காத்து கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.

கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள், தடுப்பூசி போடும் இடத்துக்கு வரும் போது அவர்களால் மற்றவர்களுக்கும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திய பிறகே அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகள், உலகின்இதர நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இணையானது. உலகிலேயே மிகப்பெரியதடுப்பூசி திட்டங்கள் இந்தியாவில் அமல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த நடைமுறைகளைப் பின்பற்றி கரோனா தடுப்பூசியும் போடப்படும்.

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்படும். முன்பதிவுக்கு பிறகு அவர்கள்எந்த மையத்துக்கு, எப்போது வர வேண்டும் என்ற விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினசரி கரோனா தொற்று

நாடு முழுவதும் நேற்று 22,890 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,79,447 ஆக உயர்ந்துள்ளது. இதில் 95,20,827 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 3,13,831 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,44,789 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் 1,236 பேர், ஆந்திராவில் 534 பேர், கேரளாவில் 5,456 பேர், டெல்லியில் 1,363 பேர், உத்தர பிரதேசத்தில் 1,526 பேர், மேற்குவங்கத்தில் 2,245 பேர், ஒடிசாவில் 351 பேர், ராஜஸ்தானில் 1,122 பேர், தெலங்கானாவில் 551 பேர்,சத்தீஸ்கரில் 1,584 பேர், ஹரியாணாவில் 714 பேர், பிஹாரில் 556 பேர், குஜராத்தில் 1,115 பேர், மத்திய பிரதேசத்தில் 1,161 பேர், அசாமில் 106 பேர், பஞ்சாபில் 448 பேர், காஷ்மீரில் 385 பேர், ஜார்க்கண்டில் 211 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x