Published : 18 Dec 2020 04:44 PM
Last Updated : 18 Dec 2020 04:44 PM
பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை எப்போது இயல்புநிலைக்குத் திரும்பும் என்பதற்கு ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ் பதில் அளித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தொடங்கியபின் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதத்துக்குப்பின் முக்கியமான நகரங்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்பு முழுமையாகக் குறையாததால், இன்னும் முழுமையான பயணிகள் ரயில்சேவை நடைமுறைக்கு வரவில்லை. பல்வேறு மாநிலங்களில் புறநகர் ரயில்வே சேவையும் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.
இந்நிலையில் ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே.யாதவ் டெல்லியில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணிகள் ரயில் பிரிவில் நடப்பு நிதியாண்டில் வருவாய் 87 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.4,600 கோடி மட்டுமே பயணிகள் ரயில் சேவை பிரிவில் வருவாய் கிடைத்துள்ளது. இது 2021, மார்ச் மாதம் நிதியாண்டு முடிவில் ரூ.15 ஆயிரம் கோடிவரை உயரும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஆண்டு ரூ.53 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு 87 சதவீதம் வருவாயில் இழப்பு ஏற்படக்கூடும்.
பயணிகள் ரயில்சேவையில் ஏற்படும் இழப்புகள், சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் ஈடுகட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கிடைத்த வருவாயைவிட, இந்த ஆண்டு சரக்கு போக்குவரத்து வருவாய் அதிகரிக்கும் என்று நினைக்கிறோம்.
கடந்த ஆண்டு கையாளப்பட்ட சரக்குகளின் அளவை டிசம்பர் மாதத்திலேயே எட்டிவிட்டோம். ஆனால், கரோனா வைரஸ் பரவலால் பயணிகள் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டதால், மிகப்பெரிய இழப்பு பயணிகள் ரயில்சேவை பிரிவில் ஏற்பட்டுள்ளது.
தற்போது இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் சேவையில்கூட பயணிகள் 30 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே செல்கிறார்கள். கரோனா வைரஸ் அச்சம் மக்கள் மத்தியில் இன்னும் நீங்கவில்லை.தற்போது ரயில்வே சார்பில் 1,089 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவை 60 சதவீதம் இயங்கத் தொடங்கிவிட்டது. மும்பை புறநகர் ரயில்சேவை 88 சதவீதமும், சென்னை புறநகர்ரயில் சேவை 50 சதவீதமும் இயங்கத் தொடங்கியுள்ளன.
நாடுமுழுவதும் பயணிகள் ரயில்சேவை எப்போது சீரடையும், இயல்புக்கு வரும் என்பதற்கான உறுதியான தேதி எதையும் கூறுவது சாத்தியமில்லை. மாநில அரசுகளுடன், ரயில்வே மண்டல பொதுமேலாளர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எப்போது, எந்தெந்த இடங்களுக்கு மட்டும் ரயில்களை இயக்கலாம் என மாநிலஅரசுகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கிறார்கள்.
இன்னும் சூழல் இயல்புக்குத் திரும்பவில்லை, கரோனா அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள். ரயி்ல்வே மூத்த அதிகாரிகள் சூழலைக் கூர்ந்து கண்காணித்து வருகிறார்கள், பயணிகள் ரயில்வே சேவை படிப்படியாகவே இயல்புநிலைக்கு வரும்.
இவ்வாறு யாதவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT