Published : 18 Dec 2020 02:57 PM
Last Updated : 18 Dec 2020 02:57 PM
மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 முக்கியத் தலைவர்கள் திடீரென விலகியதால் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் பொதுச்செயலாளர் கபீருல் இஸ்லாம் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை சிறுபான்மைப் பிரிவின் தலைவர் ஹாஜி எஸ்கே நூரலுக்கு கபீருல் இஸ்லாம் அனுப்பினார். மேலும், எம்எல்ஏ சில்பத்ரா தத்தாவும் கட்சியிலிருந்து விலகினார்.
ஏற்கெனவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சர் சுவென்டு அதிகாரியும், பான்டவேஸ்வர் தொகுதி எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி ஆகியோர் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரக்பூர் எம்எல்ஏவான சில்பத்ரா தத்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் “ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வில் பிராசந்த் கிஷோர் தலையிடுகிறார். அவர் தலையீடு அதிகரிக்கும்பட்சத்தில் என்னைப் போல் பலரும் கட்சியிலிருந்து வெளியேறுவார்கள்.
இப்போதுள்ள சூழலில் நான் கட்சிக்கு தகுதியானவர் இல்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. எதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும்.நான் மக்களிடம் வாக்குகளைப் பெற்றுள்ளேன். நானே சென்றுவிட்டால், மக்கள் எங்கு செல்வார்கள்” எனத் தெரிவித்தார்.
இவர்கள் தவிர மேற்கு வங்கத்தின் தெற்குப்பகுதி போக்குவரத்து கழகத்தின் மாநில குறைதீ்ர்ப்பு பிரிவின் கண்காணிப்பாளர் பதவியிலிருந்து திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் திபான்சு சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும்நிலையில் அதிருப்தி அடைந்த தலைவர்கள் பலர் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகக்கூடும் என்று கூறப்படுகிறது.
கொல்க்ததாவுக்கு அமித் ஷா நாளை வந்தபின் நடக்கும் நிகழ்ச்சியில் சுவென்டு அதிகாரி, எம்எல்ஏக்கள் சில்பேந்திர தத்தா, ஜிதேந்திர திவாரி இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைத் தவிர பல முக்கியத் தலைவர்களும் பாஜகவில் அமித் ஷா முன்னிலையில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT